Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

peruttha vasana vakuppu

~ 7 min read

பெருத்த வசன வகுப்பு

முன்னுரை

இது முருகப்பிரான் தமக்குபதேசித்த மௌனோபதேசத்தின் சிறப்பைக் கூறுகின்றது.

பெருத்த வசன வகுப்பு (மூலம்)

தனத்த தனதன தனத்த தனதன

அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்

அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்

அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்

எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்

இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்

இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
இதற்கி தெதிரென இணைக்க அரியதும்

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்

நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்

நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்

உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.

பெருத்த வசன வகுப்பு (பதம் பிரித்தது)

அருக்கன் உலவிய சகத்ரயமும் இசை
அதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்

அவஸ்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிது இருக்கும் மவுனமும்

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்றுவன பொருள் விகற்பம் மொழிவதும்

அழுக்கு மலஇருள் முழுக்கின் உழல்வதை
அடக்கி அவநெறி கடக்க விடுவதும்

எருக்கும் இதழியும் முடிக்கும் இறை குரு
எமக்கும் இறையவன் எனத் திகழுவதும்

இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்

இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
இதற்கு இது எதிரென இணைக்க அரியதும்

இறக்க எனது எதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்

நெருக்குவன உபநிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்

நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப்பவனும் அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த உரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தியுற அனுபவிக்கும் நிதியமும்

உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொடு உரை செயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.

பதவுரை

சூரியன் சஞ்சாரம் செய்கின்ற பூர், புவ, சுவர் எனும் மூவுலகங்களிலும், சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள, அவ்வுலகங்களில் விளங்குகின்ற எல்லா இன்ப நுகர்ச்சிகளும் இதுவே எனும்படி, எல்லா பொருட்களிலும் ஒன்று கூடியது போல நிறைந்து உள்ளதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும், பிராரப்த வினைகளைத் தவிர மீதியை அழித்து, மனம் வாக்கு காயம் இவைகளின் செய்கைகளை, அற்றுப் போகும்படி செய்து, நிஷ்களமான ஆனந்த நிலையான மவுன நிலையை அருளுவது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

மூடத்தனமானதும், சண்டைக்குக் காரணமானதும், போலியானதுமான புறச்சமயவாதிகள், ஆறு சமயத்தினரும், ஆரவாரம் செய்யும் தத்துவப் பொருளின் மாறுபாடுகளை, மெய்ப் பொருளுக்கு மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கி அந்த சமயக் கொள்கைகளை நிராகரிப்பதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

ஆன்மா ஆணவம், மாயை, கன்மம் எனும் மும் மல இருளில் மூழ்கி அலைவதை, ஒழித்து தீய நெறி தாண்ட உதவுவது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

எருக்க மலரையும் கொன்றை மலரையும் சென்னியில் சூடும் பெருமான், எனது ஆசான் இவனே என சொல்லவும், இதைப் பாடும் எனக்கும் குல தெய்வமாகத், விளங்குவதற்குக் காரணமாக உபதேச மொழிகளை இருவருக்கும் புகன்றது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

நல்வினை தீவினை இரண்டினாலும் அடித்தளமாக வைத்து தீட்டப் பட்டும், அக புற அழுக்குகளினால் மூடப்பட்டதும் ஆன என் உடம்பின், தொடர்பு அடியோடு நீங்குவதற்கு, ஒரு தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்ததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

வேதங்கள் முதலிய சகல சாஸ்திரங்களும், சண்முகன் அருளிய உபதேசத்திற்கு நிகராகும் என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

எனது காலம் முடிந்து ˝வன் உடல் கூட்டை விட்டு செல்லும்போது, என்னை எமபுரத்திற்கு செல்லக் கூட்டிப்போக வந்திருக்கும் எம தூதர்களை, அடக்கி திருப்பிச் செல்வதற்கான ஒரு ஒப்பற்ற மன வலிமையை அருள்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

நிறைவான பொருளை எடுத்துச் சொல்லும், வேதாந்தமாகிய உபநிடத்தின் ஞான அத்தியாயத்தின் அல்லது காண்டத்தின் முடிந்த முடிவாய் எடுத்துச் சொல்லும், பூரண பக்குவ நிலையில் தான் இருப்பிடமாகக் கொண்டு திகழ்வது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

தீ, மண், ஆகாயம், காற்று, நீர் என்று கூறப்படும் பஞ்ச பூதங்களின், சேர்க்கையால் வகுக்கப்பட்ட (பஞ்சீ கரணம்) ஒரு தத்துவ விதிமுறைக்கு அகப்படாமல் அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு வடிவமான வஸ்துவை தரிசிக்க செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

அறிவு, .. அறியப்படுகின்ற பொருள், அறிபவன் (எனும் திரிபுடிகளும்), அற்றுப் போன, இடத்தில், ஸ்திரமாக நிற்கும்படி செய்ய வல்லதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

முத்தி நெறி அடையாத மூர்க்கரை விட்டு பத்தி நெறியில் ஸ்திரமாக நிற்கும் உன் அடியவர்கள், வாசனா மலத்தில் செக மாயையில் அகப்பட்டு பிரமித்து அந்த பிரபஞ்ச மாயையை அகற்றி, அந்த உலக பசு பாச தொந்தம் ஆகிய விலங்கினின்றும் விடுதலை அடைந்து பேரானந்த அநுபவத்தை நல்குவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

நெஞ்சை நெகிழ வைக்கும் உனது திருவருள் பிரகாசத்தில், ஒன்றி மூழ்கி அனுபவித்து பேரின்ப நிலையில் நிற்க, மனம், வாக்கு, காயம் ஆகிய இம் மூன்றின் வியாபாரங்களை அற்றுப் போகும்படி செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்னி, தாரகைகள் முதலியவற்றுக்கெல்லாம் மூல ஒளியாய் திகழ்வதும், வெட்ட வெளியைத் தாண்டிய பரவெளியாய் திகழ்வதும், சராசரங்களில் சேதனம் அசேதனம் சகலத்திலும் உயிராய்த் திகழ்வதும் ஆகிய நிலைகளில் ஞானிகளால் உணரப்படுவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

வலிய நிகரில்லாத மயிலைச் செலுத்தி, அசுரர்கள் பயந்து ஓடும் வண்ணம், போர் புரியும் திறமை கொண்டவனும், அழகிய தழைகளை போர்த்துக் கொண்டிருக்கும் வள்ளிப் பிராட்டியை திருமணம் செய்துகொண்ட சண்முகனும் ஒப்பற்ற தெய்வமுமாகியவன் எனக்கு உபதேசித்து அருளிய மகிமை மிக்க உபதேச மொழியே.

சொல் விளக்கம்

1. அருக்கன் உலவிய ... சூரியன் சஞ்சாரம் செய்கின்ற , சகத்ரயமும் ... பூர், புவ, சுவர் எனும் மூவுலகங்களிலும், இசை ... சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள, அதிற்கொள் சுவையென ... அவ்வுலகங்களில் விளங்குகின்ற எல்லா இன்ப நுகர்ச்சிகளும் இதுவே எனும்படி, அனைத்து நிறைவதும் ... எல்லா பொருட்களிலும் ஒன்று கூடியது போல நிறைந்து உள்ளதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

2. அவஸ்தை பலவையும் ... வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும், அடக்கி ... பிராரப்த வினைகளைத் தவிர மீதியை அழித்து, அகிலமும் ... மனம் வாக்கு காயம் இவைகளின் செய்கைகளை, அவிழ்ச்சி பெற ... அற்றுப் போகும்படி செய்து, இனிது இருக்கும் மவுனமும் ... நிஷ்களமான ஆனந்த நிலையான மவுன நிலையை அருளுவது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

3. அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் ... மூடத்தனமானதும், சண்டைக்குக் காரணமானதும், போலியானதுமான புறச்சமயவாதிகள், ... ஆறு சமயத்தினரும், அரற்றுவன பொருள் விகற்பம் மொழிவதும் ஆரவாரம் செய்யும் தத்துவப் பொருளின் மாறுபாடுகளை, மெய்ப் பொருளுக்கு மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கி அந்த சமயக் கொள்கைகளை நிராகரிப்பதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

4. அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை ... ஆன்மா ஆணவம், மாயை, கன்மம் எனும் மும் மல இருளில் மூழ்கி அலைவதை, அடக்கி அவநெறி கடக்க விடுவதும் ... ஒழித்து தீய நெறி தாண்ட உதவுவது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

5. எருக்கும் இதழியு முடிக்கும் இறை ... எருக்க மலரையும் கொன்றை மலரையும் சென்னியில் சூடும் பெருமான், குரு ... எனது ஆசான் இவனே என சொல்லவும், எமக்கும் இறையவன் என ... இதைப் பாடும் எனக்கும் குல தெய்வமாகத், திகழுவதும் ... விளங்குவதற்குக் காரணமாக உபதேச மொழிகளை இருவருக்கும் புகன்றது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

6. இரட்டை வினைகொடு திரட்டு ... நல்வினை தீவினை இரண்டினாலும் அடித்தளமாக வைத்து தீட்டப் பட்டும், மலவுடல் ... அக புற அழுக்குகளினால் மூடப்பட்டதும் ஆன என் உடம்பின், இணக்கம் அற ... தொடர்பு அடியோடு நீங்குவதற்கு, ஒரு கணக்கை அருள்வதும் ... ஒரு தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்ததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

7. இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் ... வேதங்கள் முதலிய சகல ... சாஸ்திரங்களும், இதற்கு இது எதிரென இணைக்க அரியதும் சண்முகன் அருளிய உபதேசத்திற்கு நிகராகும் என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

8. இறக்க ... எனது காலம் முடிந்து ˝வன் உடல் கூட்டை விட்டு செல்லும்போது, எனதெதிர் நடக்கும் யமபடர் ... என்னை எமபுரத்திற்கு செல்லக் கூட்டிப்போக வந்திருக்கும் எம தூதர்களை, கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும் ... அடக்கி திருப்பிச் செல்வதற்கான ஒரு ஒப்பற்ற மன வலிமையை அருள்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

9. நெருக்குவன ... நிறைவான பொருளை எடுத்துச் சொல்லும், உபநிடத்தின் இறுதிகள் ... வேதாந்தமாகிய உபநிடத்தின் ஞான அத்தியாயத்தின் அல்லது காண்டத்தின் முடிந்த முடிவாய் எடுத்துச் சொல்லும், நிரப்பு கடையினில் இருப்பை உடையதும் ... பூரண பக்குவ நிலையில் தான் இருப்பிடமாகக் கொண்டு திகழ்வது (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

10. நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென ... தீ, மண், ஆகாயம், காற்று, நீர் என்று கூறப்படும் பஞ்ச பூதங்களின், நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் ... சேர்க்கையால் வகுக்கப்பட்ட (பஞ்சீ கரணம்) ஒரு தத்துவ விதிமுறைக்கு அகப்படாமல் அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு வடிவமான வஸ்துவை தரிசிக்க செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

11. நினைப்பு ... அறிவு, நினைவது . .. அறியப்படுகின்ற பொருள், நினைப்பவனும் ... அறிபவன் (எனும் திரிபுடிகளும்), அறு ... அற்றுப்
போன, நிலத்தில் ... இடத்தில், நிலைபெற ... ஸ்திரமாக நிறுத்த உரியதும் ... நிற்கும்படி செய்ய வல்லதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

12. நிலைத்த அடியவர் ... முத்தி நெறி அடையாத மூர்க்கரை விட்டு பத்தி நெறியில் ஸ்திரமாக நிற்கும் உன் அடியவர்கள், மலைத்தல் அதுகெட ... வாசனா மலத்தில் செக மாயையில் அகப்பட்டு பிரமித்து அந்த பிரபஞ்ச மாயையை அகற்றி, நிவிர்த்தி உற அனுபவிக்கு(ம்) நிதியமும் ... அந்த உலக பசு பாச தொந்தம் ஆகிய விலங்கினின்றும் விடுதலை அடைந்து பேரானந்த அநுபவத்தை நல்குவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

13. உருக்கு திருவருள் ... நெஞ்சை நெகிழ வைக்கும் உனது திருவருள் பிரகாசத்தில், திளைத்து மகிழ்தர ... ஒன்றி மூழ்கி அனுபவித்து பேரின்ப ... நிலையில் நிற்க, உளத்தொடு உரைசெயல் ஒளித்து விடுவதும் மனம், வாக்கு, காயம் ஆகிய இம் மூன்றின் வியாபாரங்களை அற்றுப் போகும்படி செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

14. ஒளிக்கும் ஒளியென ... உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்னி, தாரகைகள் முதலியவற்றுக்கெல்லாம் மூல ஒளியாய் திகழ்வதும், வெளிக்கும் வெளியென ... வெட்ட வெளியைத் தாண்டிய பரவெளியாய் திகழ்வதும், உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் ... சராசரங்களில் சேதனம் அசேதனம் சகலத்திலும் உயிராய்த் திகழ்வதும் ஆகிய நிலைகளில் ஞானிகளால் உணரப்படுவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).

15. உரத்த தனிமயில் உகைத்து ... வலிய நிகரில்லாத மயிலைச் செலுத்தி, நிசிசரர் ஒளிக்க ... அசுரர்கள் பயந்து ஓடும் வண்ணம், அமர்பொரு சமர்த்தன் ... போர் புரியும் திறமை கொண்டவனும், அணிதழை... அழகிய தழைகளை

16. உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ... போர்த்துக் கொண்டிருக்கும் வள்ளிப் பிராட்டியை திருமணம் செய்துகொண்ட சண்முகனும் , ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே ... ஒப்பற்ற தெய்வமுமாகியவன் எனக்கு உபதேசித்து அருளிய மகிமை மிக்க உபதேச மொழியே.

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

22%
Reading Progress
Local First