சேவகன் வகுப்பு
சேவகன் வகுப்பு (மூலம்)
தனதன தனன தனதன தனன
தனதன தனன தனத்தா தனனா
இருபிறை எயிறு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ
விடவே இறுகிய கயிறு படவினை
முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
அருமறை முறையின் முறை முறை
கருதி அதரிடை வெருவ ஒறுத்தால்
வகையால் அறிவொடு மதுர மொழியது
குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே
சேவகன் வகுப்பு (பதம் பிரித்ததது)
இரு பிறை எயிறு நிலவு எழ உடலம்
இருள் படு சொருபம் உடைக் கோ விடவே
இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
அருமறை முறையின் முறை முறை கருதி
அதர் இடை வெருவ ஒறுத்தால் வகையால்
அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர் கனகிரியை வளைத்தோர் புதல்வா
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளை கடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச் சேவகனே.
பதவுரை
இரண்டு சந்திர பிரபைகள் போன்ற பற்களில் இருந்து வெண்ணிற ஒளி
வீச உடம்பு கரிய நிறமுடைய தலைவனாகிய எமரா¤னின் கட்டளைப்படி
சுவாசத்தில் இறுகக் கட்டி பிராணனை இழுத்துச் செல்லும் சூக்குமக் கயிற்றில் உயிர்கள் அகப்பட பூர்வ வினைகளின் படி எம தூதர்கள் சூக்கும உடம்பின் பிடரியில் கை வைத்துப் பிடித்துக் கொண்டு எமபுரத்திற்குச் செல்லும் போது
வழியில் அச்சம் விளையும் படி பலவிதமாக தண்டித்தால் அருமை மிக்க வேதம் விதித்த விதியின் படி ஒழுங்காக தவறு ஏற்படாத வகையில் உன்னை சிந்தித்து
புத்தியும் இனிய பேச்சும் தடுமாறி வரும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா என உணர்ச்சியுடன் உன்னை அழைப்பேன். அந்தச் சமயம் உடனே வந்து காப்பாற்ற வேண்டும்.
இராவணனின் பத்து தலைகளையும் இருபது கைகளையும் அறுத்து கீழே விழும்படி ஒப்பற்ற அஸ்திரத்தால் வீழ்த்திய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மருகனே, (ஒப்பற்ற ப்ரம்மாஸ்திரத்தைக் கொண்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒரே அம்பினால் இராவணனை வீழ்த்தினார் என அருணகிரியார் கூறுகிறார்.
வலிமை மிக்க முப்புரங்களும் தீயில் சாம்பலாக, உயர்ந்த மேன்மையான மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் திருக்குமாரனே,
நறுமணம் மிக்க வனத்தில் வசிக்கும் வேடப்பெண்கள் வழிபட (அவர்களின் வழிபாட்டை ஏற்று) பசுமையான பரண் மேல் இருந்து தினைப் புனங்களைக் காப்பற்றிய வள்ளி நாச்சியாரின் மணவாளனே, ( பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த இடத்தை விட்டு அகலாமல் இருந்த வள்ளி நாச்சியாரை இருப்பாள் என்கிறார். பரமாத்மாவை அடைய தீவிரமான நெறியில் பழகும் ˝வாத்மா கடைபிடிக்கும் அஷ்டாங்க யோகத்தில் இது தாரண நிலையாகும்).
உலகைச் சுற்றி இருக்கும் சமுத்திரம் கதறி முறையிடவும் அசுரர்கள் இறக்கவும் க்ரவுஞ்ச மலையுடன் போர் செய்த சுத்த வீரனே.
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. ..... இரு பிறை எயிறு நிலவு எழ உடலம்
இருள் படு சொருபம் உடைக் கோ விடவே
... இரண்டு சந்திர பிரபைகள் போன்ற பற்களில் இருந்து வெண்ணிற ஒளி
வீச உடம்பு கரிய நிறமுடைய தலைவனாகிய எமரா¤னின் கட்டளைப்படி
2. இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
... சுவாசத்தில் இறுகக் கட்டி பிராணனை இழுத்துச் செல்லும் சூக்குமக் கயிற்றில் உயிர்கள் அகப்பட பூர்வ வினைகளின் படி எம தூதர்கள் சூக்கும உடம்பின் பிடரியில் கை வைத்துப் பிடித்துக் கொண்டு எமபுரத்திற்குச் செல்லும் போது
3. அருமறை முறையின் முறை முறை கருதி அதர் இடை வெருவ ஒறுத்தால் வகையால்
... வழியில் அச்சம் விளையும் படி பலவிதமாக தண்டித்தால் அருமை மிக்க வேதம் விதித்த விதியின் படி ஒழுங்காக தவறு ஏற்படாத வகையில் உன்னை சிந்தித்து
4. அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
... புத்தியும் இனிய பேச்சும் தடுமாறி வரும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா என உணர்ச்சியுடன் உன்னை அழைப்பேன். அந்தச் சமயம் உடனே வந்து காப்பாற்ற வேண்டும்.
5. ஒருபது சிரமும் இருபது கரமும் விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
... இராவணனின் பத்து தலைகளையும் இருபது கைகளையும் அறுத்து கீழே விழும்படி ஒப்பற்ற அஸ்திரத்தால் வீழ்த்திய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மருகனே, (ஒப்பற்ற ப்ரம்மாஸ்திரத்தைக் கொண்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒரே அம்பினால் இராவணனை வீழ்த்தினார் என அருணகிரியார் கூறுகிறார்.
6. உரமது பெரிய திரிபுரம் எரிய உயர் கனகிரியை வளைத்தோர் புதல்வா
... வலிமை மிக்க முப்புரங்களும் தீயில் சாம்பலாக, உயர்ந்த மேன்மையான மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் திருக்குமாரனே,
7. மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா
... நறுமணம் மிக்க வனத்தில் வசிக்கும் வேடப்பெண்கள் வழிபட (அவர்களின் வழிபாட்டை ஏற்று) பசுமையான பரண் மேல் இருந்து தினைப் புனங்களைக் காப்பற்றிய வள்ளி நாச்சியாரின் மணவாளனே, ( பெரும் பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த இடத்தை விட்டு அகலாமல் இருந்த வள்ளி நாச்சியாரை இருப்பாள் என்கிறார். பரமாத்மாவை அடைய தீவிரமான நெறியில் பழகும் ˝வாத்மா கடைபிடிக்கும் அஷ்டாங்க யோகத்தில் இது தாரண நிலையாகும்).
8. வளை கடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே. .... உலகைச் சுற்றி இருக்கும் சமுத்திரம் கதறி முறையிடவும் அசுரர்கள் இறக்கவும் க்ரவுஞ்ச மலையுடன் போர் செய்த சுத்த வீரனே.
