சிவமயம்
முருகன் பாமாலை
பதினொன்பதாம் ஆண்டு தைப்பூச இலவச வெளியீடு துபாய் நகரத்தார் சங்கம்
முன்னுரை
இந்த திருவகுப்புப் பாடல்களை சீரிய முறையில் தொகுத்து, பிழையில்லாமல் வழங்கப் பேருதவி புரிந்த, அகில உலக திருப்புகழ் மற்றும் வேல்மாறல் குழுவின் நிறுவனர், முனைவர். செந்தில் கண்ணன் முத்து (பழனிப் பித்தன்) (ஹாங் காங்) அவர்களுக்கும் திருமதி. உமா மகேஸ்வரி (செந்திலாண்டவன் அடிமை) அவர்களுக்கும் அவர்களைக் காண்பித்துக் கொடுத்த பழனி ஆண்டவருக்கும் அடி பணிந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் இருவரும் கெளமார நெறி தழைக்க வேண்டி, நீலச்சிகண்டி என்ற இணையதளப் பத்திரிகையை மாதந்தோறும் நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டர் செந்தில் கண்ணன் அவர்கள் திருப்புகழ் மற்றும் திருவகுப்பு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
வேண்டுகோள்
இறையருளால் இயன்றவரை பிழைகளை தவிர்த்து பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அருணகிரிநாதப் பெருமான் கூறியது போல் பிழையின்றிப் பாடி பயன் பெறுமாறு வேண்டுகிறோம். அப்படி இயலவில்லை என்றாலும் முருகப்பெருமானை நினைந்து உள்ளம் உருகி அன்புடன் பாடினால் நிச்சயம் காட்சி தந்து அருள் புரிவார் என்பது உறுதி.
அருணகிரிநாதர் துதி
அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அறை இரண்டும்
மருவியுள உருஅருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்த வொண்ணா
பெரு வெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன்
ஒருவனையே புகழ்ந்த அருள் அருணகிரி சேவடிப்போ துளத்துள் வைப்பாம்
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதிஎன் றுரைத்தும்
நந்தா வகுப்பலங் காரம் அவற்கே நனி புனைந்தும்
முந்தா தரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரி நாத என்னை நீ ஏன்றருளே
சங்கல்பம்
ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி
தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ்
சாத்திடவும் ஓதிடவும் தா
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே
தீபம் - கந்தர் அந்தாதி
தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெறுஞ் செல்வனுக்கே
காப்புச் செய்யுள் - கந்தர் அந்தாதி
வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைதுவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
காப்புச் செய்யுள் - திருப்புகழ்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
நவவீரர் துதி
வீரவாகுத் தேவர் - மாணிக்கம்
சீர்அறா முருகவேள் உறை செழுமை
ஆர்அறா நிலைய வாரியில் அமர் எண்
நார்அறா உழுவல் ஏறிடும் மலிவில்
வீரவாகு வெனும் வீரனை விழைவோம்
வீரகேசரிதேவர் - தரளம்
என்னை ஆள் இறையாய் உலகெங்கணும்
மன்னு கந்த பிரான் மந்திரத்திடை
மின்னு வாழ்க்கை அறா வீரகேசரி
தன்னை உள்ளன்பின் தாழ்வார்க்கு இன்று ஊழலே
வீரமகேந்திரதேவர் - புட்பராகம்
ஓதரும் வீரமகேந்திரன் ஒருவன்
பாதம் உºள படர் மாந்தர் அபரம் ஈ
ஆதாரம் வீய மதாந்தரம் கருதும்
சூத மகாமரம் ஈர்ந்த தோமரவேள்
வீரமகேசதேவர் - கோமேதகம்
அரணத்து இறையோனை அனாரதமேன்
கரணத்து எணுவார் கவல் நூறிடுவான்
முரணிற் பொரு சூரனொடெ முனைவோன்
சரணச் சுக வீர மகேசனரோ
வீரபுரந்தரதேவர் - வைடூரியம்
திகையெலாம் நீக்கம் இலாது செறிந்த பெருந்
தகை யெலாம் ஏற்று அவிர் சாமிபதம் பரவாப்
பகையெலா நீக்கு ஒரு பாடு பிறந்து உளுவார்
மிகையெலாம் வீட்டிடும் வீர புரந்தர னே
வீரராக்கததேவர் - வயிரம்
வீவு அயனம் இலா மேல் வீட்டு நெறியை நேடும்
ஆவல் அறவர் வாழ் வானாட்டு முருகவேளின்
தாவில் அருள்கொள் வீரராக்கதன் அடிதாழ்வார்
தேவரும் அறியா ஓர் சீர்த்தியில் உயர்வாரால்
வீரமார்த்தாண்டதேவர் - மரகதம்
தாமதம் ஏற்றிடுமாசில் சார்ச்சேந்தன்
சேம அடிக்களியாம் ஓர் சீர்ச்சார்ந்தோர்
மாமிடல் மிக்குடை வீர மார்த்தாண்டன்
பூமன நச்சுநர் போதம் போய்க்காண்பார்
வீராந்தகதேவர் - பவளம்
மள்ளல் ஏறுஎண் சிகி இவரும் மஞ்சனை
உள்ளுவோர் ஒங்கு அவன் உணர்வு சந்ததங்
கொள்ளு வீராந்தகன் நினைவு கொண்டிடின்
தள்ளுவார் காண் கணத்து தறுகண் யாவையும்
வீரதீரதேவர் - நீலம்
ஆரெப்படி முனினும் அதுபோலத் திருவருள்கூர்
நாரப்பெருமானாய் அழல் நாகப்பெயரான் ஆள்
தாரப் பொருள் வேலற் பணிதகைமைக் குணவீர
தீரப் பெயரோனைப் புகழ் தெருளர்க்கு இலை சிறுகே
