சீர்பாத வகுப்பு
முன்னுரை
"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" இது அப்பர் சுவாமிகள் திருவாக்கு. நமது அருணகிரியார் "வரிசை தரும் பதம் அது பாடி வளமொடு செந்தமிழ் உரை செய்ய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே" என்றும் "நின் பதயுகப் பிரசித்தி என்பன வகுத்துரைக்க நின்பணி தமிழ்த்ரயத்தை அருள்வாயே" என்றும் நெஞ்சுருக ஆண்டவனை வேண்டினர். முருகவேளும் அன்பன் வேண்டியவாறே அருளினர். இதுவே சீர்பாத வகுப்பின் வரலாறு ஆகும்.
சீர்பாத வகுப்பு (மூலம்)
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன தனதான தானதன
உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்
உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன சிவயோக சாதனையில்
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி தமதூடு நாடுவதும்
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய கலையார வாரமற
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும்
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ சலராசி யேறவிடும்
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது மடியேன் மனோரதமும்
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு பதிசேர் சடாமவுலி
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு திருமார்பி லாடுவதும்
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி அபிஷேக மாயிரமும்
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும்
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் இரைதேர்க டாடவியில்
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் புனமீ துலாவுவதும்
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
முடுகுவதும் அருÿணறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் பகைகோடி சாடுவதும்
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ முயல்வார் தபோபலமும்
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென அருள்பாடி யாடிமிக
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி யாளுவதும்
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில கவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு குறளாகி மாபலியை
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு பதுவாகு பூதரமும்
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் வருதார காசுரனும்
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் வடிவேல னீலகிரி
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி யுமையாள்த்ரி சூலதரி
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை யபிராம நாயகிதன்
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் மணநாறு சீறடியே.
சீர்பாத வகுப்பு (பதம் பிரித்தது)
உததி இடை கடவு மரகத அருண குல துரக
உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள்
உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை
யுக முடிவின் இருள் அகல ஒருசோதி வீசுவதும்
உடலும் உடல் உயிரும் நிலை பெறுதல் பொருள் என உலகம்
ஒருவி வரும் மநு பவன சிவ யோக சாதனையில்
ஒழுகுமவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும்
உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்
உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதய
உருவுடைய மலின பவ சல ராசி ஏறவிடும்
உறுபுணையும் அறிமுகமும் உயர் அமரர் மணி முடியில்
உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்
இதழி வெகு முக ககன நதி அறுகு தறுகண் அரவு
இமகிரண தருண உடுபதி சேர் சடா மவுலி
இறை மகிழ உடை மணியோடு அணி சகல மணி கலென
இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும்
இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு
எரி புகுத உரகர் பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமும் நெறுநெறென முறிய வட குவடு இடிய
இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்
இனியகனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும்
இலகு வெகு கட விகடம் தட பார மேருவுடன்
இகலி முது திகிரி கிரி நெறிய வளை கடல் கதற
எழு புவியை ஒருநொடியில் வலமாக ஓடுவதும்
எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் இரை தேர் கடா அடவியில்
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் புனம் மீது உலாவுவதும்
முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முது வடவை விழி சுழல வரு கால தூதர் கெட
முடுகுவதும் அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை
முடிய வருவதும் அடியர் பகை கோடி சாடுவதும்
மொகு மொகு என மதுப முரல் குரவு விளவினது குறு
முறியும் மலர் வகுள தள முழு நீல தீவரமும்
முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் விரத
முநிவர் கருத அரிய தவம் முயல்வார் தபோபலமும்
முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும்
அறுமுக குமர சரணம் என அருள் பாடி ஆடி மிக
மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழி அருவி
முழுகுவதும் வருக என அறை கூவி ஆளுவதும்
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுது
உலகு அறிய மழலை மொழி கொடு பாடும் ஆசுகவி
முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இதம் மவுனம்
முகுள பரிமள நிகில கவி மாலை சூடுவதும்
மத சிகரி கதறி முது முதலை கவர் தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதி மூலமென
வரு கருணை வரதன் இகல் இரணியனை நுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மாபலியை
வலிய சிறை இட வெளியின் முகடு கிழி பட முடிய
வளரு முகில் நிருதன் இருபது வாகு பூதரமும்
மகுடம் ஒரு பதும் முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் வரு தாரகாசுரனும்
மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி
மறுகி முறையிட முனியும் வடிவேலன் நீலகிரி
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி
வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை
வநிதை அபிநவை அநகை அபிராம நாயகி தன்
மதலை மலை கிழவன் அநுபவன் அபயன் உபய சதுர்-
மறையின் முதல் நடு முடிவின் மணநாறு சீறடியே
பதவுரை
கடலின் நடுவில், கடுமையான வேகத்துடன் செலுத்தப்படுகின்ற, பசுமை செம்மை முதலான ஏழு நிறங்களை உடைய, உயர்ந்த ஜாதியைச் சார்ந்த ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, வனப்பு வாய்ந்த, பொன் மயமான தேரில், எண்ணற்ற கோடிக்கணக்கான சூரியர்கள் உதித்தார்கள் என எண்ணும்படி, விவரித்துச் சொல்ல முடியாதபடி பல நிறங்களைக் கொண்ட தோகையை உடைய பட்சியான மயிலின் மேல், சதுர் யுக முடிவில் உலகெல்லாம் அழியும்படி பிரளய காலத்தில் தோன்றும் பேரிருள் போன இடம் தெரியாமல் ஓடிப் போக, ஒப்பற்ற பிரகாசத்தை வீசி எங்கும் வியாபித்திருப்பதும் (மண நாறு சீறடியே).
ஐம்பூதத்தின் சேர்க்கையாக அமர்ந்திருக்கும் இந்தத் தேகமும், உடலின் உள் இருந்து கொண்டு சதா துன்பங்களைத் தரும் உயிரும், அழிய விடாமல் சதேக முக்தி அடைவதையே, நாம் அடைய வேண்டிய குறி என எண்ணி, உலகப் பற்றை அடியோடு நீக்கி, அந்தப் பக்குவ நிலையில் தோன்றும், மந்திரங்களுக்கு இருப்பிடமான, சிவ யோக பயிற்சியில், நெடிது காலம் நிலை பெற்று நிற்கும் யோகிகள், கருவி கரணங்கள் வசம் வெளிபட்டுக் கொண்டிருக்கும் நிலைமை கெட, புறக் கண்கள் சுழுமுனையை நோக்கும் நிலையில் மயிர் பாலம் என்று சொல்லப்படும் நெற்றியின் நடு இடத்தில் செருகி நிற்க, ஞானக் கண் கொண்டு, யோக சாஸ்திரத்தில் விளக்கி இருக்கும் முறைப்படி, தனது இதய கமலமாகிய தகராகாசத்தில், விரும்பி நோக்கியபடி இருப்பதும் (மண நாறு சீறடியே).
இறைவன் உருவத் திரு மேனி உடையவன் என்பார் சிலர், இல்லை, அவருக்கென்று உருவம் கிடையாது அவர் நிஷ்கள ருபன் என்பார் சிலர், எங்குமுள்ள பரம் பொருளே இறைவன் என்பது ஒரு கொள்கை, கடவுள் என்கின்ற தத்துவமே கிடையாது என்பவர்களும், இவர்கள் எல்லோரும் மெய்ப் பொருளை காணாமல் பயனின்றி பொழுதைப் போக்கும், பொய் சமயங்களின், தர்க்கம் செய்து கூச்சல் எழுப்பும் நிலை முற்றும் ஒழியவும் பேச்சு நின்று மௌனம் உறவும், உணர்ச்சி சிறு எல்லையை விட்டு பெரிய சுற்றில் திகழவும், நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகி, நான் தான் என்று முனைப்புடன் நிற்கும் அகங்காரம் அவிழ்ந்து போக, எப்போதும் சாஸ்வதமாய் திகழும் மெய்ப் பொருளை, உணர்ந்து அநுபவிக்கும் சிவ ஞானிகளின், ஞான சொருபமாக விளங்குவதும் (மண நாறு சீறடியே).
உற்ற சொந்தம் என்கிற முறையில் வரும், மனைவி மக்கள் எனப்படும் அலைகள் வீசுகின்ற, எனது உள்ளத்தைப் போன்ற, சொருபம் உள்ள, பாவங்கள் நிறைந்த, பிறவிக் கடலில் இருந்து, ஏறச் செய்யும், திடமான தெப்பமும் (மண நாறு சீறடியே, ஞான உலகத்திற்கு வாயில் போன்றதும், சீலம் மிக்க தேவர்களின் மகுடம் தரித்த தலைகளில், தங்குவதும் (மண நாறு சீறடியே, அழிவில்லாததும் (மண நாறு சீறடியே),அடியேனுடைய சித்தத்திற்கு இலக்காக இருப்பதுவும் (மண நாறு சீறடியே).
கொன்றையும், அளவற்ற கிளைகளை உடைய ஆகாச கங்கையையும், அறுகம் புல்லையும், அஞ்சாமையையும் வீரமும் உடைய சர்ப்பத்தையும், குளிர்ந்த ஒளி கிரணங்களை உடையதும் இளமை பொருந்தியதும் நட்சத்திர கூட்டங்களுக்கு தலைவனான சந்திரனையும், சேர்த்து வைத்துக் கொண்டுள்ள, ஜடையாளராகிய, எல்லாப் பொருள்களிலும் விளங்கும் சிவ பெருமான், இன்பமடைய, அரை மணியில் அணிந்துள்ள, அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், கிண்கிணி சதங்கை முதலிய ஆபரணங்களின் கலின் என ஒலிக்கும், இமவான் மடந்தையாகிய பார்வதி தேவி தழுவிக் குழையும், ஒப்பற்ற பரமனின் மார்பில் விளையாடல் செய்வதுவும் (மண நாறு சீறடியே).
இமைப்பது இல்லாத விண்ணவரின் பொன்னுலகில், இந்நகரின் மன்னனாகிய இந்திரன் மீண்டும் குடியேற, சூரபத்மனின் வயிற்றில் கலி என்ற ˝ரம் நுழைய, சர்ப்ப ராஜனான ஆதிஷேசனின், ஆயிரம் பணாமுடிகளும், அதலம் முதல் ஏழு பாதாள உலகங்களும், மட மடனென முறிந்து போகவும், வடக்கில் உள்ள மேரு மலையின் சிகரங்கள் இடியவும், இளம் பருவத்து தளர்ந்த நடையைப் பயின்று, திருவிளையாடல் செய்வதும் (மண நாறு சீறடியே).
இனிப்புள்ள வாழை, மா, பலா முதலிய பழங்களையும், கடலை பயிறு, பனங்கிழங்கின் பிளவு, பொரி ஆகியவற்றை, திரு அமுதாக உட்கொள்ளும், விளங்குகின்ற, அதிகமாக பாயும் மத நீரையும், விசித்திரமான அழகும் உள்ள, பரவிய மகிமை உள்ள மேரு மலை போன்ற கணபதியுடன், பகைமை கொண்டது போல் நடித்து, பழைய சக்ரவாள கிரி நெரியுறவும், உலகை வளைத்துள்ள கடல் பயந்து பேரொலி கிளப்பவும், கீழ் மேல் தலா ஏழு உலகங்களை, ஒரு நொடிப் பொழுதில் பிரதட்சணமாக ஓடி வந்ததும் (மண நாறு சீறடியே).
காட்டுப் பன்றிகளும், புலிகளும், கரடிகளும், சிங்கங்களும், யானைகளும், காட்டு பசுக்களும், மலை ஆடுகளும், (மான்களின் வகைகள்) பலவிதமான மான் இனங்களும், எப்பொழுதும், உணவைத் தேடித் திரிகின்ற, அடர்ந்த பெரும் காட்டில், வேடுவர்களால் அமைக்கப்பட்ட, பரணில் அமர்ந்து, வளப்பம் மிக்க தினைப் பயிரை உண்ண வரும் கிளி வகைகளை ஓட்ட, ஆலோலம் பாடிக்கொண்டே ஓட்டும் வழக்கத்தை நன்றாக பழகி வந்த, வள்ளிப் பிராட்டி, அருமையாக வளர்ந்து வந்த, தினைப் புனத்தில் உலாவிக் கொண்டிருப்பதுவும் (மண நாறு சீறடியே).
பிறவிக்கு வித்தான வினைகளை அனுபவித்து முடிந்த காலத்தில், சந்திரனின் பிறை போன்று வளைந்த பற்களும், பாசக் கயிற்றையும் கொண்டு, பெரிய வடவாமுகாக்னி போன்ற தீப்பொறிகளைக் கக்கும் கண்கள் சுழலும்படி, உயிர்களைப் பிடித்துக் கொண்டு போக வரும், எம தூதர்கள் பின் வாங்கி ஓட அவர்களை விரட்டி துரத்துவதும் (மண நாறு சீறடியே),
உயிர்கள் ஆன்மீக வழியில் செல்லுவதற்கு உதவி புரிந்து கொண்டிருப்பதும் (மண நாறு சீறடியே)
எண்ணிய எண்ணங்களெல்லாம் இனிதே நிறை பெற உற்ற துணையாக நிற்பதுவும் (மண நாறு சீறடியே),
அடியவர்களுக்கு ஏற்படும் உட்பகை புறப்பகை போன்றவைகளை மோதி அழிப்பதுவும் (மண நாறு சீறடியே).
மொகு மொகு எனும் ஒலியுடன், சித்தர்களாகிய வண்டுகள் ரீங்காரம் செய்யும் , குரா மலரும், விளா மரத்தின் இளந்தளிரும், மகிழ மரத்தின் தளிர்கள் கூடிய மலர்களும், பெரிய செங்குவளை மலர்களும், இந்தீவரம் எனப்படும் கருங் குவளை மலர்களையும் (நீலோற்பலம்), மணம் வீசி விளங்குவதும் (மண நாறு சீறடியே),
எல்லாவற்றுளும் முதன்மை ஸ்தானத்தை வழங்க வல்லதும் (மண நாறு சீறடியே)
பல விதமான விரதங்களை அநுஷ்டிக்கும் தியாக சீலர்கள் கூட, நினைக்க முடியாத அளவிற்கு, தவத்தை முயன்று செய்கின்ற மேலோரின், தவத்தின் பயனாக முத்தியைத் தருவதும் (மண நாறு சீறடியே)
சரவண மடுவில் அவதரித்த ஞான தீபமே, கார்த்திகை மகளிர் அறுவரது பயோதரத்தில் வாய் வைத்துப் பருகும் சண்முகனே, குமரா உன்னுடைய திருவடிகளுக்கு அடைக்கலம் என்று, அப் பரமனின் கருணையை பாடியும், பக்தி மார்க்கத்தின் உச்ச கட்டமான கூத்து ஆடியும் சொற்கள் பெரிதும் குழற, உள்ளம் நெக்குருகி அழுது கை குவித்து வணங்கி, உள்ளம், உடல், ஆவி இவை மூன்றும் உருகி நிற்கும் அடியார்களது, ஆனந்தக் கண்ணீராகிய அருவியில் மூழ்குவதும் (மண நாறு சீறடியே)
அழுது நிற்கும் அவ்வடியார்களை வருக வருக என, வீறிட்டு அழைத்து, ஆண்டு ஆளுவதும் (மண நாறு சீறடியே).
எடுத்த பிறப்பு அனைத்திலும், பரம்பரை பரம்பரையாக திருப்பணி நினைவில் இருந்த அடிமை, எனும் தன் அடிமை உரிமையை, உலகனைத்தும் காட்சியாக அறியுமாறு, இனிய மொழி கொண்டு பாடுகின்றதும், ஆசு கவியாக (ஆசு கவியாக) சொல்லப்பட்ட பாக்களை, பெரும் திரள்களாக வரும் புலவர்களாகிய வண்டுகள், முகர்ந்து பார்க்கும் அதாவது சிந்தித்துப் பார்க்கும், இன்பத் தேன் மயமான மவுனம் அரும்பிய நிலையிலிருந்து கூறும், மணம் வீசுகின்ற, திருப்புகழ் அனைய என்னுடைய சகல பாமாலைகளை சூடிக் கொள்வதும் (மண நாறு சீறடியே).
மும் மத அறிவை உடையதும் மலை போன்ற தோற்றம் உடையதும், ஓலமிட்டு அழுது, பெரிய முதலையால் பிடித்துக் கொள்ளப் பட்டு, நீண்ட தடாகத்தின் மத்தியில் இருந்த, தனக்கு முடிவு காலம் வந்து விட்டதோ என அஞ்சி, ஒரு முறை ஆதி மூலமே என அழைக்க, உடனே விரைந்து வந்து அந்த கºஜந்திரனைக் காத்த கருணா மூர்த்தியும், பகைமை பாராட்டிய இரணியாசுரனை, நகத்தின் நுனியால் பிளக்கும் நரசிம்ம மூர்த்தியும், குள்ள வடிவங் கொண்ட வாமன மூர்த்தியாக, மகா பலி சக்ரவர்த்தியை, கடினமான சிறையில் வைக்க, அண்டத்தின் உச்சி பிளவுபட, முழுமையாக வளர்ந்த மேகம் அன்ன நிறமும் கொடைத் திறமும் கொண்டவனும், அசுரனான இராவணனின் இருபது தோள்களான மலைகளும், கிரீடம் அணிந்த பத்து தலைகளும் முறி பட்டு, போரிடும் கணையை ஏவி பெருமை வாய்ந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் மருகனும்,
அசுரர் சேனைகளும், யுத்தத்தில் எதிர்த்து வந்த தாரகாசுரனும், இறந்து போகவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், மகர மீன்கள் அதிகமாக உள்ள சமுத்திர நீர் வேலின் சூட்டினால் குறைந்து கலங்கி ஓ என்று இரைச்சல் இடவும், உக்கிர கோலம் கொள்ளும் சிறந்த வேலாயுதம் ஏந்தியுள்ள பெருமானும்,
மூன்று வேளைகளிலும் மூன்று நீலோற்பல மலர் மலரும் திருத்தணியில் வீற்றிருக்கும் ஆச்சார்ய சிரேஷ்டனும்,
என்றும் இளமை உடையவள், தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் உற்பத்தி செய்பவள், திரு, செல்வம், புகழ், ஞானம், வீரம், வைராக்யம் எனும் ஆறு குணங்களை உடையவள், தேன் போன்ற இனிய மொழியை உடையவள், காலத்தை அளக்கும் பைரவி, விபூதி போன்ற வெண்ணிறம் உடையவள், பிரணவ ரூபம் கொண்டவள், முத்தலை சூலம் ஏந்தியவள், தாமரையை ஆசனமாகக் கொண்டவள், காளி, மலம் அற்றவள், துர்க்கை, கீழ், பூ, மேல் லோகத்தின் தலைவி, தூய்மை மிக்கவள், அழகில் சிறந்தவள், என்றும் புதுமையாக இருப்பவள், பாபம் அற்றவள், அபரிமித அழகியான தேவியின் குமாரனும், குறிஞ்சி நில அதிபதியும், எல்லா உயிர்களுக்கும் அநுபவ சாட்சியாக உள்ளவனும், பயமழித்து ஆறுதல் அளிப்பவனுமாகிய முருகப் பெருமானின், இரண்டாகிய (சீறடியே - சிற்றடிகளே) நான்கு வேதங்களின் முதல் இடை கடை ஆகிய நிலைகளிலும், அருள் மணம் வீசும், இரண்டு இளம் திருவடிகளேதான்.
சொல் விளக்கம்
1. உததி இடை ... கடலின் நடுவில், கடவு ... கடுமையான வேகத்துடன் செலுத்தப்படுகின்ற, மரகத அருண ... பசுமை செம்மை முதலான ஏழு நிறங்களை உடைய, குல துரக ... உயர்ந்த ஜாதியைச் சார்ந்த ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, உப லளித ... வனப்பு வாய்ந்த, கனக ரத ... பொன் மயமான தேரில், சத கோடி சூரியர்கள் ... எண்ணற்ற கோடிக்கணக்கான சூரியர்கள்
2. உதயம் என ... உதித்தார்கள் என எண்ணும்படி, அதிக வித கலப கக மயிலின் மிசை ... விவரித்துச் சொல்ல முடியாதபடி பல நிறங்களைக் கொண்ட தோகையை உடைய பட்சியான மயிலின் மேல், யுக முடிவின் இருள் அகல ... சதுர் யுக முடிவில் உலகெல்லாம் அழியும்படி பிரளய காலத்தில் தோன்றும் பேரிருள் போன இடம் தெரியாமல் ஓடிப் போக, ஒரு சோதி வீசுவதும் ... ஒப்பற்ற பிரகாசத்தை வீசி எங்கும் வியாபித்திருப்பதும் (மண நாறு சீறடியே).
3. உடலும் ... ஐம்பூதத்தின் சேர்க்கையாக அமர்ந்திருக்கும் இந்தத் தேகமும், உடல் உயிரும் ... உடலின் உள் இருந்து கொண்டு சதா துன்பங்களைத் தரும் உயிரும், நிலை பெறுதல் ... அழிய விடாமல் சதேக முக்தி அடைவதையே, பொருள் என ... நாம் அடைய வேண்டிய குறி என எண்ணி, உலகம் ஒருவி ... உலகப் பற்றை அடியோடு நீக்கி, வரும் ... அந்தப் பக்குவ நிலையில் தோன்றும், மநு பவன ... மந்திரங்களுக்கு இருப்பிடமான, சிவ யோக சாதனையில் ... சிவ யோக பயிற்சியில்,
4. ஒழுகுமவர் ... நெடிது காலம் நிலை பெற்று நிற்கும் யோகிகள், பிறிது பரவசம் அழிய ... கருவி கரணங்கள் வசம் வெளிபட்டுக் கொண்டிருக்கும் நிலைமை கெட, விழி செருகி ... புறக் கண்கள் சுழுமுனையை நோக்கும் நிலையில் மயிர் பாலம் என்று சொல்லப்படும் நெற்றியின் நடு இடத்தில் செருகி நிற்க, உணர்வு விழி கொடு ... ஞானக் கண் கொண்டு, நியதி ... யோக சாஸ்திரத்தில் விளக்கி இருக்கும் முறைப்படி, தமதூடு ... தனது இதய கமலமாகிய தகராகாசத்தில், நாடுவதும் ... விரும்பி நோக்கியபடி இருப்பதும் (மண நாறு சீறடியே).
5. உரு எனவும் ... இறைவன் உருவத் திரு மேனி உடையவன் என்பார் சிலர், அரு எனவும் ... இல்லை, அவருக்கென்று உருவம் கிடையாது அவர் நிஷ்கள ருபன் என்பார் சிலர், உளது எனவும் ... எங்குமுள்ள பரம் பொருளே இறைவன் என்பது ஒரு கொள்கை, இலது எனவும் ... கடவுள் என்கின்ற தத்துவமே கிடையாது என்பவர்களும், உழலுவன ... இவர்கள் எல்லோரும் மெய்ப் பொருளை காணாமல் பயனின்றி பொழுதைப் போக்கும், பரசமய ... பொய் சமயங்களின், கலை ஆரவாரம் அற ... தர்க்கம் செய்து கூச்சல் எழுப்பும் நிலை முற்றும் ஒழியவும்
6. உரை அவிழ ... பேச்சு நின்று மௌனம் உறவும், உணர்வு அவிழ ... உணர்ச்சி சிறு எல்லையை விட்டு பெரிய சுற்றில் திகழவும், உளம் அவிழ ... நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகி, உயிர் அவிழ ... நான் தான் என்று முனைப்புடன் நிற்கும் அகங்காரம் அவிழ்ந்து போக, உளபடியை ... எப்போதும் சாஸ்வதமாய் திகழும் மெய்ப் பொருளை, உணருமவர் ... உணர்ந்து அநுபவிக்கும் சிவ ஞானிகளின், அநுபூதி ஆனதுவும் ... ஞான சொருபமாக விளங்குவதும் (மண நாறு சீறடியே).
7. உறவு முறை ... உற்ற சொந்தம் என்கிற முறையில் வரும், மனைவி மகவு எனும் அலையில் ... மனைவி மக்கள் எனப்படும் அலைகள் வீசுகின்ற, எனது இதய ... எனது உள்ளத்தைப் போன்ற, உருவுடைய ... சொருபம் உள்ள, மலின ... பாவங்கள் நிறைந்த, பவ சல ராசி ... பிறவிக் கடலில் இருந்து, ஏறவிடும் ... ஏறச் செய்யும்,
8. உறுபுணையும் ... திடமான தெப்பமும் (மண நாறு சீறடியே, அறிமுகமும் ... ஞான உலகத்திற்கு வாயில் போன்றதும், உயர் அமரர் மணி முடியில் ... சீலம் மிக்க தேவர்களின் மகுடம் தரித்த தலைகளில், உறைவதுவும் ... தங்குவதும் (மண நாறு சீறடியே, உலைவிலதும் ... அழிவில்லாததும் (மண நாறு சீறடியே), அடியேன் மனோ ரதமும் ... அடியேனுடைய சித்தத்திற்கு இலக்காக இருப்பதுவும் (மண நாறு சீறடியே).
9. இதழி ... கொன்றையும், வெகு முக ககன நதி ... அளவற்ற கிளைகளை உடைய ஆகாச கங்கையையும், அறுகு ... அறுகம் புல்லையும், தறுகண் அரவு ... அஞ்சாமையையும் வீரமும் உடைய சர்ப்பத்தையும், இமகிரண தருண உடுபதி ... குளிர்ந்த ஒளி கிரணங்களை உடையதும் இளமை பொருந்தியதும் நட்சத்திர கூட்டங்களுக்கு தலைவனான சந்திரனையும், சேர் ... சேர்த்து வைத்துக் கொண்டுள்ள, சடாமவுலி ... ஜடையாளராகிய,
10. இறை ... எல்லாப் பொருள்களிலும் விளங்கும் சிவ பெருமான், மகிழ ... இன்பமடைய, உடை மணியோடு ... அரை மணியில் அணிந்துள்ள, அணி சகல மணி கலென ... அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், கிண்கிணி சதங்கை முதலிய ஆபரணங்களின் கலின் என ஒலிக்கும், இமைய மயில் தழுவும் ... இமவான் மடந்தையாகிய பார்வதி தேவி தழுவிக் குழையும், ஒரு திரு மார்பில் ஆடுவதும் ... ஒப்பற்ற பரமனின் மார்பில் விளையாடல் செய்வதுவும் (மண நாறு சீறடியே).
11. இமையவர்கள் நகரில் ... இமைப்பது இல்லாத விண்ணவரின் பொன்னுலகில், இறை குடி புகுத ... இந்நகரின் மன்னனாகிய இந்திரன் மீண்டும் குடியேற, நிருதர் வயிறு எரி புகுத ... சூரபத்மனின் வயிற்றில் கலி என்ற ˝ரம் நுழைய, உரகர் பதி ... சர்ப்ப ராஜனான ஆதிஷேசனின், அபிஷேகம் ஆயிரமும் ... ஆயிரம் பணாமுடிகளும்,
12. எழுபிலமும் ... அதலம் முதல் ஏழு பாதாள உலகங்களும், நெறுநெறென முறிய ... மட மடனென முறிந்து போகவும், வட குவடு இடிய ... வடக்கில் உள்ள மேரு மலையின் சிகரங்கள் இடியவும், இளைய தளர் நடை பழகி ... இளம் பருவத்து தளர்ந்த நடையைப் பயின்று, விளையாடல் கூருவதும் ... திருவிளையாடல் செய்வதும் (மண நாறு சீறடியே).
த 13. இனியகனி ... இனிப்புள்ள வாழை, மா, பலா முதலிய பழங்களையும், கடலை பயறு ... கடலை பயிறு, ஒடியல் ... பனங்கிழங்கின் பிளவு, பொரி ... பொரி ஆகியவற்றை, அமுது செயும் ... திரு அமுதாக உட்கொள்ளும், இலகு ... விளங்குகின்ற, வெகு கட ... அதிகமாக பாயும் மத நீரையும், விகடம் ... விசித்திரமான அழகும் உள்ள, தட பார மேருவுடன் ... பரவிய மகிமை உள்ள மேரு மலை போன்ற கணபதியுடன்,
14. இகலி ... பகைமை கொண்டது போல் நடித்து, முது திகிரி கிரி நெரிய ... பழைய சக்ரவாள கிரி நெரியுறவும், வளை கடல் கதற ... உலகை வளைத்துள்ள கடல் பயந்து பேரொலி கிளப்பவும், எழு புவியை ... கீழ் மேல் தலா ஏழு உலகங்களை, ஒரு நொடியில் வலமாக ஓடுவதும் ... ஒரு நொடிப் பொழுதில் பிரதட்சணமாக ஓடி வந்ததும் (மண நாறு சீறடியே).
15. எறுழி ... காட்டுப் பன்றிகளும், புலி ... புலிகளும், கரடி ... கரடிகளும், அரி ... சிங்கங்களும், கரி ... யானைகளும், கடமை ... காட்டு பசுக்களும், வருடை ... மலை ஆடுகளும், உழை இரலை மரை ... (மான்களின் வகைகள்) பலவிதமான மான் இனங்களும், இரவு பகல் ... எப்பொழுதும், இரை தேர் ... உணவைத் தேடித் திரிகின்ற, கடா அடவியில் ... அடர்ந்த பெரும் காட்டில்,
16. எயினர் இடும் ... வேடுவர்களால் அமைக்கப்பட்ட, இதண் அதனில் ... பரணில் அமர்ந்து, இளகு தினை கிளி கடிய ... வளப்பம் மிக்க தினைப் பயிரை உண்ண வரும் கிளி வகைகளை ஓட்ட, இனிது பயில் ... ஆலோலம் பாடிக்கொண்டே ஓட்டும் வழக்கத்தை நன்றாக பழகி வந்த, சிறுமி ... வள்ளிப் பிராட்டி, வளர் ... அருமையாக வளர்ந்து வந்த, புனம் மீது உலாவுவதும் ... தினைப் புனத்தில் உலாவிக் கொண்டிருப்பதுவும் (மண நாறு சீறடியே).
17. முதலவினை முடிவில் ... பிறவிக்கு வித்தான வினைகளை அனுபவித்து முடிந்த காலத்தில், இரு பிறை எயிறு ... சந்திரனின் பிறை போன்று வளைந்த பற்களும், கயிறு கொடு ... பாசக் கயிற்றையும் கொண்டு, முது வடவை விழி சுழல ... பெரிய வடவாமுகாக்னி போன்ற தீப்பொறிகளைக் கக்கும் கண்கள் சுழலும்படி, வரு ... உயிர்களைப் பிடித்துக் கொண்டு போக வரும், கால தூதர் கெட ... எம தூதர்கள் பின் வாங்கி ஓட
18. முடுகுவதும் ... அவர்களை விரட்டி துரத்துவதும் (மண நாறு சீறடியே), அருள் நெறியில் உதவுவதும் ... உயிர்கள் ஆன்மீக வழியில் செல்லுவதற்கு உதவி புரிந்து கொண்டிருப்பதும் (மண நாறு சீறடியே), நினையுமவை முடிய வருவதும் ... எண்ணிய எண்ணங்களெல்லாம் இனிதே நிறை பெற உற்ற துணையாக நிற்பதுவும் (மண நாறு சீறடியே), அடியர் பகை கோடி சாடுவதும் ... அடியவர்களுக்கு ஏற்படும் உட்பகை புறப்பகை போன்றவைகளை மோதி அழிப்பதுவும் (மண நாறு சீறடியே).
19. மொகு மொகு என ... மொகு மொகு எனும் ஒலியுடன், மதுப முரல்... சித்தர்களாகிய வண்டுகள் ரீங்காரம் செய்யும் , குரவு ... குரா மலரும், விளவினது குறு முறியும் ... விளா மரத்தின் இளந்தளிரும், மல˙ வகுள தள ... மகிழ மரத்தின் தளிர்கள் கூடிய மலர்களும், முழு நீலம் ... பெரிய செங்குவளை மலர்களும், தீவரமும் ... இந்தீவரம் எனப்படும் கருங் குவளை மலர்களையும் (நீலோற்பலம்),
20. முருகு கமழ்வதும் ... மணம் வீசி விளங்குவதும் (மண நாறு சீறடியே), அகில முதன்மை தருவதும் ... எல்லாவற்றுளும் முதன்மை ஸ்தானத்தை வழங்க வல்லதும் (மண நாறு சீறடியே), விரத முநிவர் ... பல விதமான விரதங்களை அநுஷ்டிக்கும் தியாக சீலர்கள் கூட, கருத அரிய ... நினைக்க முடியாத அளவிற்கு, தவம் முயல்வார் ... தவத்தை முயன்று செய்கின்ற மேலோரின், தபோ பலமும் ... தவத்தின் பயனாக முத்தியைத் தருவதும் (மண நாறு சீறடியே)
21. முருக! சரவண! ... சரவண மடுவில் அவதரித்த ஞான தீபமே, மகளிர் அறுவர் முலை நுகர் அறுமுக ... கார்த்திகை மகளிர் அறுவரது பயோதரத்தில் வாய் வைத்துப் பருகும் சண்முகனே, குமர சரணம் என ... குமரா உன்னுடைய திருவடிகளுக்கு அடைக்கலம் என்று, அருள் பாடி ... அப் பரமனின் கருணையை பாடியும், ஆடி மிக ... பக்தி மார்க்கத்தின் உச்ச கட்டமான கூத்து ஆடியும்
22. மொழி குழற ... சொற்கள் பெரிதும் குழற, அழுது ... உள்ளம் நெக்குருகி அழுது தொழுது ... கை குவித்து வணங்கி, உருகுமவர் ... உள்ளம், உடல், ஆவி இவை மூன்றும் உருகி நிற்கும் அடியார்களது, விழி அருவி முழுகுவதும் ... ஆனந்தக் கண்ணீராகிய அருவியில் மூழ்குவதும் (மண நாறு சீறடியே), வருக என ... அழுது நிற்கும் அவ்வடியார்களை வருக வருக என, அறை கூவி ... வீறிட்டு அழைத்து, ஆளுவதும் ... ஆண்டு ஆளுவதும் (மண நாறு சீறடியே).
23. முடிய ... எடுத்த பிறப்பு அனைத்திலும், வழி வழி அடிமை ... பரம்பரை பரம்பரையாக திருப்பணி நினைவில் இருந்த அடிமை, எனும் உரிமை அடிமை ... எனும் தன் அடிமை உரிமையை, முழுதுலகு அறிய ... உலகனைத்தும் காட்சியாக அறியுமாறு, மழலை மொழி கொடு பாடும் ... இனிய மொழி கொண்டு பாடுகின்றதும், ஆசு கவி ... ஆசு கவியாக
24. முதல மொழிவன ... (ஆசு கவியாக) சொல்லப்பட்ட பாக்களை, நிபுண மதுபம் ... பெரும் திரள்களாக வரும் புலவர்களாகிய வண்டுகள், முகர் ... முகர்ந்து பார்க்கும் அதாவது சிந்தித்துப் பார்க்கும், இதம் மவுனம் முகுள ... இன்பத் தேன் மயமான மவுனம் அரும்பிய நிலையிலிருந்து கூறும், பரிமள ... மணம் வீசுகின்ற, நிகில கவிமாலை சூடுவதும் ... திருப்புகழ் அனைய என்னுடைய சகல பாமாலைகளை சூடிக் கொள்வதும் (மண நாறு சீறடியே).
25. மத சிகரி ... மும் மத அறிவை உடையதும் மலை போன்ற தோற்றம் உடையதும், கதறி ... ஓலமிட்டு அழுது, முது முதலை கவர் தர ... பெரிய முதலையால் பிடித்துக் கொள்ளப் பட்டு, நெடிய மடு நடுவில் ... நீண்ட தடாகத்தின் மத்தியில் இருந்த, வெருவி ... தனக்கு முடிவு காலம் வந்து விட்டதோ என அஞ்சி, ஒரு விசை ஆதி மூலமென ... ஒரு முறை ஆதி மூலமே என அழைக்க,
26. வரு கருணை வரதன் ... உடனே விரைந்து வந்து அந்த கºஜந்திரனைக் காத்த கருணா மூர்த்தியும், இகல் இரணியனை ... பகைமை பாராட்டிய இரணியாசுரனை, நுதி உகிரின் வகிரும் அடல் அரி ... நகத்தின் நுனியால் பிளக்கும் நரசிம்ம மூர்த்தியும், வடிவு குறளVகி ... குள்ள வடிவங் கொண்ட வாமன மூர்த்தியாக, மாபலியை ... மகா பலி சக்ரவர்த்தியை,
27. வலிய சிறை இட ... கடினமான சிறையில் வைக்க, வெளியின் முகடு கிழி பட ... அண்டத்தின் உச்சி பிளவுபட, முடிய வளரு முகில் ... முழுமையாக வளர்ந்த மேகம் அன்ன நிறமும் கொடைத் திறமும் கொண்டவனும், நிருதன் இருபது வாகு பூதரமும் ... அசுரனான இராவணனின் இருபது தோள்களான மலைகளும்,
28. மகுடம் ஒரு பதும் முறிய ... கிரீடம் அணிந்த பத்து தலைகளும் முறி பட்டு, அடு பகழி விடு குரிசில் மருக ... போரிடும் கணையை ஏவி பெருமை வாய்ந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் மருகனும், நிசிசரர் தளமும் ... அசுரர் சேனைகளும், வரு தாரகாசுரனும் ... யுத்தத்தில் எதிர்த்து வந்த தாரகாசுரனும்,
29. மடிய ... இறந்து போகவும், மலை பிளவு பட ... கிரவுஞ்ச மலை பிளவுபடவும், மகர சலதி நிதி குறுகி மறுகி முறையிட ... மகர மீன்கள் அதிகமாக உள்ள சமுத்திர நீர் வேலின் சூட்டினால் குறைந்து கலங்கி ஓ என்று இரைச்சல் இடவும், முனியும் வடிவேலன் ... உக்கிர கோலம் கொள்ளும் சிறந்த வேலாயுதம் ஏந்தியுள்ள பெருமானும், (நீலகிரி)
30. மருவு குருபதி ... மூன்று வேளைகளிலும் மூன்று நீலோற்பல மலர் மலரும் திருத்தணியில் வீற்றிருக்கும் ஆச்சார்ய சிரேஷ்டனும், யுவதி ... என்றும் இளமை உடையவள், பவதி ... தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் உற்பத்தி செய்பவள், பகவதி ... திரு, செல்வம், புகழ், ஞானம், வீரம், வைராக்யம் எனும் ஆறு குணங்களை உடையவள், மதுர வசனி ... தேன் போன்ற இனிய மொழியை உடையவள், பைரவி ... காலத்தை அளக்கும் பைரவி, கவுரி ... விபூதி போன்ற வெண்ணிறம் உடையவள், உமையாள் ... பிரணவ ரூபம் கொண்டவள், திரிசூலதரி ... முத்தலை சூலம் ஏந்தியவள்,
31. வனசை ... தாமரையை ஆசனமாகக் கொண்டவள், மதுபதி ... காளி, அமலை ... மலம் அற்றவள், விசயை ... துர்க்கை, திரிபுரை ... கீழ், பூ, மேல் லோகத்தின் தலைவி, புநிதை ... தூய்மை மிக்கவள், வநிதை ... அழகில் சிறந்தவள், அபிநவை ... என்றும் புதுமையாக இருப்பவள், அநகை ... பாபம் அற்றவள், அபிராம நாயகி தன் ... அபரிமித அழகியான தேவியின்
32. மதலை ... குமாரனும், மலை கிழவன் ... குறிஞ்சி நில அதிபதியும், அநுபவன் ... எல்லா உயிர்களுக்கும் அநுபவ சாட்சியாக உள்ளவனும், அபயன் ... பயமழித்து ஆறுதல் அளிப்பவனுமாகிய முருகப் பெருமானின், உபய - இரண்டாகிய (சீறடியே - சிற்றடிகளே) , சதுர்மறையின் முதல் நடு முடிவின் ... நான்கு வேதங்களின் முதல் இடை கடை ஆகிய நிலைகளிலும், மண நாறும் ... அருள் மணம் வீசும், சீறடியே ... இரண்டு இளம் திருவடிகளேதான்.
