திருக்கையில் வழக்க வகுப்பு
முன்னுரை
இது முருகன் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதாய ப்ரசாத மகிமையைக் கூறிற்று. அங்ஙனம் வழங்கப்படுவது ஞானமேயாதலின் அந்த ஞானத்தை ஐராவதம் போன்ற நிருமல ஞானக் களிற்றுக்கு உவமையாக்கி ஞானவேழ வகுப்புப் போலவே அந்த ஞான சக்தியின் பெருமையைக் கூறினர்.
திருக்கையில் வழக்க வகுப்பு (மூலம்)
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன
தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன,
தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன
தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன,
சதுர்த்தச தலத்தையும் எடுத்தக டவுட்பணி
சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன,
சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன,
தரத்தன, தலைச்சுர, நதிப்புனல் குளிப்பன;
அருக்கர் பதம்உட்பட மிதித்திடு பதத்தன;
அறப்படு கொலைத்தொழில் புறப்படு முகத்தன;
அரக்கர்ப டைகெட்டுமு றியப்பொரு பதத்தன;
அயற்கும் அமரர்க்கும்ஒ ருபொற்பதி யளிப்பன;6டு
அளித்தவ முதுக்கவள மொக்குவன; முத்தெறி
அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ;
அடித்தெழு பொருப்பினை நெருப்பெழ விழிப்பன
அதிக்ரம கமப்ரவுட விக்ரம மதத்தன;
மருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன;
வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன;
மதிப்பிள வெனச்செருகி வைத்தென மணிச்சதுர்
மருப்பின; இமைப்பற விழித்த நயனத்தன;
வளைத்த கிரியைப் பொடிபடுத்தி இபம்எட்டையு
மலைத்தவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன;
மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன;
மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன;
திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி
திருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை
செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்
சிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள்
செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு
திருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள்
திருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர்
சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே
திருக்கையில் வழக்க வகுப்பு (பதம் பிரித்தது)
தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன
தடக்கரம் நிமிர்த்து உயர் உடுக்குலம் உதிர்ப்பன,
தடித்து எழு குலப் புவி நடுக்குற அதிர்ப்பன
தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன,
சதுர்த்தச தலத்தையும் எடுத்த கடவுள் பணி
சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன,
சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன,
தரத்தன, தலைச் சுரநதிப் புனல் குளிப்பன;
அருக்கர் பதம் உட்பட மிதித்திடு பதத்தன;
அறப்படு கொலைத் தொழில் புறப்படு முகத்தன;
அரக்கர் படை கெட்டு முறியப் பொரு பதத்தன;
அயற்கும் அமரர்க்கும் ஒரு பொற் பதி அளிப்பன;
அளித்த அமுதுக் கவளம் மொக்குவன;
முத்தெறி அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ;
அடித்து எழு பொருப்பினை நெருப்பு எழ விழிப்பன
அதிக்ரம(ம்) கம(ம்) ப்ரெளட(ம்) விக்ரம மதத்தன;
மருக் குலவு கற்பக வனத்து அலர் பறிப்பன;
வளைத்து எழு தருக்களை மொளுக்கென முறிப்பன;
மதிப் பிளவு எனச் செருகி வைத்தது என மணிச்சதுர் மருப்பின;
இமைப்பு அற விழித்த நயனத்தன
வளைத்த கிரியை பொடி படுத்தி இபம் எட்டையும்
மலைத்துஅவண் அடிப்பட மடப்பிடிஅணைப்பனடு
மழைப்புயல் கிழிப்பன புனல் பசி தணிப்பன;
மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன;
திருத்திய புனத்து இடை வனத்தழை உடுத்து இனிது இருப்பவள்
விருப்பு உறு வரைப்புயன் வினைப்பகை
செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்
சிவத்த கமலச் சரவணத்து அறுமுகப்பொருள்
செக த்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கு ஒரு
திருப்புதல்வன் உற்பலகிரிப் பெயர் தரித்தருள்
திருத்தணி மலைக்கு இறை திருப்புகழ் படிப்பவர்
சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.
பதவுரை
முருகவேளின் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதான ப்ரசாதமாகிய நிருமல ஞானக்களிற்றின் செயல்களும் தன்மைகளும் கீழ்க்கண்டவாறு - 26 வகையன
இடித்து போர் புரியும் யுத்தகளம் பயத்தினால் நடுங்கும்படி முழக்கம் இடுவன (1)
பெரிய துதிக்கையை உயர்த்தி ஆகாயத்தில் உயரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் உதிரும்படி அடிப்பன (2)
பெரிதாகிய சிறந்த ஏழு உலகங்களும் ஆட்டம் காணும்படி நடுங்கச் செய்வது (3)
முறம் போன்ற தழைத்த பரந்துள்ள காதுகளைக் கொண்டன (4)
திரட்சி மிக்க கயிலை மலை போல் நெருக்கமாக வெள்ளை நிறம் உடையன (5)
பதினான்கு உலகங்களையும் தன்முதுகில் சுமக்கும் தெய்வீகமான சர்ப்பம் ஆதிசேஷனின் ஆயிரம் பட வரிசைகளும் பயந்து நடுங்கும்படி உலா வருவன (6)
திருப் பாற்கடல் கடைந்த போது அமுதத்துடன் சேர்ந்து தோன்றின (ஐராவதத்திற்கு ஒப்பிடுகிறார்) (7),
மேலாந்தன்மையன (8)
நதிகளில் தலையாய ஆகாச கங்கையில் குளிப்பன (9)
சூரிய மண்டலம் முதல் எல்லா புவனங்களையும் மிதித்து சஞ்சரிக்கக் கூடிய கால்களை உடையன (10)
தர்ம தேவதை நடுங்கும் வகையில் கொலை உக்ரத்தை வெளிப்படுத்தும் முகத்தை உடையன (11)
அரக்கர் படை தோற்று ஓடும் படி போர் புரியும் தகுதி உடையன (12)
அயனுக்கும் அமரர்களுக்கும் ஒப்பற்ற சத்ய லோகத்தையும் அமராவதியையும் கொடுத்து உதவி புரிவன (13)
தனக்கு அளிக்கப்பட்ட அமிர்த உணவுக்குவியலை வாரி மொக்குவன (14)
முத்துக்களை வாரி வீசும் அலை வீசும் சமுத்திரத்தைக் கலக்குவன (15)
அஷ்டதிக்கு மலைகளைஆட்டி அசைப்பன (16)
சூரனுக்கு அரணாக இருந்த ஏழுமலைகளை கண்களில் அனல்வீச முழித்துப் பார்ப்பன (17)
அளவு கடந்த நிறைவான கம்பீரம் மிக்கவீரப் பெருமை உடையன (18)
நறுமணம் வீசும் கற்பக வனத்தில் பூக்களைப் பறிப்பன (19)
நிமிர்ந்து நிற்கும் மரங்களின் கிளைகளை வளைத்து படார் என ஒடிப்பன (20)
சந்திரனின் பிறை எனச் சொல்லும்படி அதை முகத்தில் சொருகி வைத்திருப்பது போல அழகிய நான்கு தந்தங்களை உடையன (21)
இமைகளை மூடாமல் விழித்திருக்கும் கண்களை உடையன (22)
பூமியை வளைத்திருக்கும் சக்ரவாள கிரியைத் தூள்செய்து அஷ்ட திக்கு கஜங்களை எதிர்த்து அவைகளை அங்கேயே கீழே தள்ளிவிட்டு தன் பெண் யானையுடன் கூடிமகிழ்வன (23)
மழை மேகத்தைக் கிழித்து (24)
அதில் இருந்து சிந்தும் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொள்வன (25),
தன் கழுத்தில் கட்டி இருக்கும் மணிகள் கணகண எனும் ஒலியை எழுப்ப மும்மத நீரைச் சொரிவன (26)
உழுது சீர்படுத்தப்பட்ட தினைப் புனத்தினில் காட்டு மரங்களின் இலைகளை உடையாகக் கொண்டு (பெண் பார்க்கப் போகும் போது மாப்பிள்ளை புதுப்புடவை கொண்டு போவது போல் வள்ளிமலைக்கு களால் ஆன ஆடைகளைக் கொண்டு போகிறார் ...) சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவன வள்ளி நாயகி விரும்புகின்ற மலை போன்ற தோள்களை உடையவன், நம் பகைவர்களாகிய வினைகளை ஜயித்து அழிப்பவன், நினைத்த காரியங்களில் அனுகூலமே புரிபவன், சரவணப் பொய்கையில் செந்தாமரைப் படுக்கையில் உதித்த சண்முகத் தெய்வம் மூவுலகங்களையும் ஈன்ற திருவயிறு உடைய பராசக்தியின் ஒப்பற்ற திருக்குமரன், நீலோற்பல மலை எனும் பெயரைத் தாங்கும் திருத்தணி மலைக்கு தலைவனாகிய முருகக்கடவுளின் திருப்புகழை ஓதுபவர்கள் விசேஷமாக அடைவது அப்பெருமானின் திருக்கையால் வழங்கப்படும் பிரசாதமே.
சொல் விளக்கம்
(முருகவேளின் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதான ப்ரசாதமாகிய நிருமல ஞானக்களிற்றின் செயல்களும் தன்மைகளும் கீழ்க்கண்டவாறு - 26 வகையன)
1. தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன தடக்கரம் நிமிர்த்து உயர் உடுக்குலம் உதிர்ப்பன,
இடித்து போர் புரியும் யுத்தகளம் பயத்தினால் நடுங்கும்படி முழக்கம் இடுவன (1), பெரிய துதிக்கையை உயர்த்தி ஆகாயத்தில் உயரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் உதிரும்படி அடிப்பன (2)
2. தடித்து எழு குலப் புவி நடுக்குற அதிர்ப்பன தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன,
பெரிதாகிய சிறந்த ஏழு உலகங்களும் ஆட்டம் காணும்படி நடுங்கச் செய்வது (3), முறம் போன்ற தழைத்த பரந்துள்ள காதுகளைக் கொண்டன (4), திரட்சி மிக்க கயிலை மலை போல் நெருக்கமாக வெள்ளை நிறம் உடையன (5)
3. சதுர்த்தச தலத்தையும் எடுத்த கடவுள் பணி சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன,
பதினான்கு உலகங்களையும் தன்முதுகில் சுமக்கும் தெய்வீகமான சர்ப்பம் ஆதிசேஷனின் ஆயிரம் பட வரிசைகளும் பயந்து நடுங்கும்படி உலா வருவன (6)
4. சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன,
தரத்தன, தலைச் சுரநதிப் புனல் குளிப்பன;
திருப் பாற்கடல் கடைந்த போது அமுதத்துடன் சேர்ந்து தோன்றின (ஐராவதத்திற்கு ஒப்பிடுகிறார்) (7), மேலாந்தன்மையன (8), நதிகளில் தலையாய ஆகாச கங்கையில் குளிப்பன (9)
5. அருக்கர் பதம் உட்பட மிதித்திடு பதத்தன; அறப்படு கொலைத் தொழில் புறப்படு முகத்தன; சூரிய மண்டலம் முதல் எல்லா புவனங்களையும் மிதித்து சஞ்சரிக்கக் கூடிய கால்களை உடையன (10), தர்ம தேவதை நடுங்கும் வகையில் கொலை உக்ரத்தை வெளிப்படுத்தும் முகத்தை உடையன (11)
6. அரக்கர் படை கெட்டு முறியப் பொரு பதத்தன; அயற்கும் அமரர்க்கும் ஒரு பொற் பதி அளிப்பன;
அரக்கர் படை தோற்று ஓடும் படி போர் புரியும் தகுதி உடையன (12), அயனுக்கும் அமரர்களுக்கும் ஒப்பற்ற சத்ய லோகத்தையும் அமராவதியையும் கொடுத்து உதவி புரிவன (13)
7. அளித்த அமுதுக் கவளம் மொக்குவன; முத்தெறி அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ;
தனக்கு அளிக்கப்பட்ட அமிர்த உணவுக்குவியலை வாரி மொக்குவன (14), முத்துக்களை வாரி வீசும் அலை வீசும் சமுத்திரத்தைக் கலக்குவன (15), அஷ்டதிக்கு மலைகளைஆட்டி அசைப்பன (16)
8. அடித்து எழு பொருப்பினை நெருப்பு எழ விழிப்பன அதிக்ரம(ம்) கம(ம்) ப்ரெளட(ம்) விக்ரம மதத்தன;
சூரனுக்கு அரணாக இருந்த ஏழுமலைகளை (நிமிர்ந்து நிற்கும் மலைகளை) கண்களில் அனல்வீச முழித்துப் பார்ப்பன (17), அளவு கடந்த நிறைவான கம்பீரம் மிக்கவீரப் பெருமை உடையன (18)
9. மருக் குலவு கற்பக வனத்து அலர் பறிப்பன; வளைத்து எழு தருக்களை மொளுக்கென முறிப்பன; நறுமணம் வீசும் கற்பக வனத்தில் பூக்களைப் பறிப்பன (19), நிமிர்ந்து நிற்கும் மரங்களின் கிளைகளை வளைத்து படார் என ஒடிப்பன
10. மதிப் பிளவு எனச் செருகி வைத்தது என மணிச்சதுர் மருப்பின; இமைப்பு அற விழித்த நயனத்தன
சந்திரனின் பிறை எனச் சொல்லும்படி அதை முகத்தில் சொருகி வைத்திருப்பது போல அழகிய நான்கு தந்தங்களை உடையன (21), இமைகளை மூடாமல் விழித்திருக்கும் கண்களை உடையன (22)
11. வளைத்த கிரியை பொடி படுத்தி இபம் எட்டையும் மலைத்து அவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன
பூமியை வளைத்திருக்கும் சக்ரவாள கிரியைத் தூள்செய்து அஷ்ட திக்கு கஜங்களை எதிர்த்து அவைகளை அங்கேயே கீழே தள்ளிவிட்டு தன் பெண் யானையுடன் கூடிமகிழ்வன (23)
12. மழைப்புயல் கிழிப்பன புனல் பசி தணிப்பன; மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன;
மழை மேகத்தைக் கிழித்து (24) அதில் இருந்து சிந்தும் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொள்வன (25), தன் கழுத்தில் கட்டி இருக்கும் மணிகள் கணகண எனும் ஒலியை எழுப்ப மும்மத நீரைச் சொரிவன (26)
13. திருத்திய புனத்து இடை வனத்தழை உடுத்து இனிது இருப்பவள் விருப்பு உறு வரைப்புயன் வினைப்பகை உழுது சீர்படுத்தப்பட்ட தினைப் புனத்தினில் காட்டு மரங்களின் இலைகளை உடையாகக் கொண்டு (பெண் பார்க்கப் போகும் போது மாப்பிள்ளை புதுப்புடவை கொண்டு போவது போல் வள்ளிமலைக்கு தழைகளால் ஆன ஆடைகளைக் கொண்டு போகிறார் ...) சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவளVன வள்ளி நாயகி விரும்புகின்ற மலை போன்ற தோள்களை உடையவன்,
14. செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல் சிவத்த கமலச் சரவணத்து அறுமுகப்பொருள் நம் பகைவர்களாகிய வினைகளை ÿஜயித்து அழிப்பவன், நினைத்த காரியங்களில் அனுகூலமே புரிபவன், சரவணப் பொய்கையில் செந்தாமரைப் படுக்கையில் உதித்த சண்முகத் தெய்வம்
15. செக த்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கு ஒரு திருப்புதல்வன் உற்பலகிரிப் பெயர் தரித்தருள்
மூவுலகங்களையும் ஈன்ற திருவயிறு உடைய பராசக்தியின் ஒப்பற்ற திருக்குமரன், நீலோற்பல மலை எனும் பெயரைத் தாங்கும்
16. திருத்தணி மலைக்கு இறை திருப்புகழ் படிப்பவர் சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.
திருத்தணி மலைக்கு தலைவனாகிய முருகக்கடவுளின் திருப்புகழை ஓதுபவர்கள் விசேஷமாக அடைவது அப்பெருமானின் திருக்கையால் வழங்கப்படும் பிரசாதமே.
