Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

vel vakuppu

~ 9 min read

வேல் வகுப்பு (மூலம்)

முன்னுரை

வேலின் பெருமையையும், ஆற்றலையும் கூறும் வகுப்பு இது.

வேல் வகுப்பு (மூலம்)

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தான

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
இடுக்கண்வினை சாடும்

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே

வேல் வகுப்பு (பதம் பிரித்தது)

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்கு நிகராகும்

பனைக்கை முக படம் கரட மதம் தவள
கசம் கடவுள் பதத்து இடு நிகளத்து முளை
தெறிக்க அரம் ஆகும்

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக்குருகி வரைக் குகையை
இடித்து வழி காணும்

பசித்து அலகை முசித்து அழுது முறைப் படுதல்
ஒழித்து அவுணர் உரத்து உதிரம் நிணத்தசைகள்
புசிக்க அருள் நேரும்

சுரர்க்கும் முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும்
இடுக்கண் வினை சாடும்

சுடர்பரிதி ஒளிப்ப நிலவு ஒழுக்குமதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர்
ஒளிப் பிரபை வீசும்

துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்
எனக்கு ஓர் துணையாகும்

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கி எழும்
அறத்தை நிலை காணும்

தருக்கி நமன் முருக்கவரின் எருக்கு மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை
கழற்கு நிகராகும்

தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உண
அழைப்பதென மலர்க் கமல கரத்தின் முனை
விதிர்க்க வளைவு ஆகும்

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணையதாகும்

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக் கடலை உடைத்து நிறை புனல் கடிது
குடித்து உடையும் உடைப்பு அடைய அடைத்து உதிரம்
நிறைத்து விளையாடும்

திசைக் கிரியை முதல் குலிசன் அறுத்த சிறை
முளைத்ததென முகட்டின் இடை பறக்க அற
விசைத்து அதிரவோடும்

சினத்த அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித்து எயிறு கடித்து விழி
விழித்து அலற மோதும்

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே1

பதவுரை

பெருத்திருக்கும் தன பாரங்களையும், நுண்ணியதாக ஒடுங்கி இருக்கும் இடையையும், வெண்மை நிறம் வீசும் பற்களையும், கருமை நிறம் கொண்ட கூந்தலையும், சிவந்த உதடுகளையும் உடைய, வீரம் மிக்க வேடர் குலத் திலகமாகிய வள்ளிப் பிராட்டியின், திருக் கண்களுக்கு ஒப்பாகும் (குகன் வேலே).

பனை மரம் போன்று நீண்டு தொங்கும் துதிக்கையும், முகத்தில் அணிந்த சித்திர வேலைப்பாடு அணிந்த சீலையும், இரண்டு கபால மத நீரையும், வெண்ணிறத்தையும் உடைய, (கஜம்) ஐராவதம் என்னும் யானையை, வாகனமாகக் கொண்ட இந்திரன், கால்களில் சூரபத்மனால் இடப்பட்ட, சிறை விலங்கின், ஆணியானது, உடை பட்டு விழ அரம் போல் செயல்படும் (குகன் வேலே).

ஞானம் கனிந்த, பழமை வாய்ந்த, மதுரை தமிழ்ச் சங்க பலகையில், தலைவனாக அமர்ந்திருக்கும், ஒப்பற்ற பாக்கள் இயற்றும் அறிவில் சிறந்த நக்கீரனுடைய , பாட்டின் இனிய பொருள் மிக்க ஒலிக்கு திருவுள்ளம் உருகி, திருப்பரங்கிரி மலைக் குகையை, அங்கு கற்கிமுகி எனும் பூதத்தால் அடைக்கப் பட்டிருந்த நக்கீரர் முதலிய புலவர்கள் அனைவரையும் அக்குகையிலிருந்து வெளி வர வழி செய்து கொடுத்தது (குகன் வேலே).

பசி கொண்டு, பேய்கள், மெலிந்து, அழுது புலம்பி, ரூ எங்கள் பசி தாங்க முடியவில்லையே க்ஷ் என முறையிடுதலை அறவே நீக்கி, அசுரர்களின், உடலின் இரத்தம் தோய்ந்த, கொழுப்போடு சேர்ந்த மாமிசத்தை, அப்பேய்கள் உண்ண, மறக்கருணையால் உடன்படும் (குகன் வேலே).

வானோர்களுக்கும், தவ சிரேஷ்டர்களுக்கும், இந்திரனுக்கும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும், உலக மக்களுக்கும், நேர்ந்த, துன்பத்திற்கு காரணமான, தீவினைக் கூட்டங்களை, மோதி அழிக்கும். (குகன் வேலே).

ஒளியை உடைய செங்கதிரோன் தோற்றுப்போய் ஒளித்துக்கொள்ளவும், குளிர்ந்த கிரணங்களை உடைய வெண்கதிரோனும் ஒளித்துக்கொள்ளவும், கரை கடந்து உலகை அழிக்காதபடி சமுத்திரத்தை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுக அக்னி ஒளித்துக்கொள்ளவும், பிரகாசிக்கின்ற, ஒளியை உடைய ஞானாசக்தியை எங்கும் பரவும்படி செய்யும் (குகன் வேலே)

தன்னைப் போற்றி வணங்கும், அன்பர்களுக்கு, வேறு யாரேனும் ஒருவர், அந்த அடியவரை அழிக்க, ஏதேனும் துன்பம் செய்ய மனதில் எண்ணினாலும், அவர் வம்சத்தையே, வேருடன் அழித்து களைந்து விடும், எனக்கு ஒப்பற்ற துணையாக இருந்து உதவி புரியும் (குகன் வேலே).

அருமை பெருமைகளை அளவிட்டுச் சொல்ல இயலாத, இறைவனது அருள் சம்பந்தப்பட்ட திருப்புகழை, விருப்புடன் செப்பியவரை, நெருங்கிவரும் பகை நிலைமையை, வேருடன் அறுத்து எறிவதற்கு, உக்ரத்துடன் புறப்படும், தர்மத்தை நிலை பெறச் செய்யும் (குகன் வேலே).

இறுமாப்புடன், எமன், அழிக்க வந்தால், எருக்க மலரையும், திங்களையும், சூடிய ஜடா பாரத்தை உடைய, வெற்றி அமைந்து, எங்கும் இருப்பவரான சிவபிரானின் திருவடிக்கு, ஒப்பாகும் (குகன் வேலே).

தமது ஆட்சியில் உள்ள, சிவக் கண கூட்டம், மகிழ்வோடு உண்பதற்கு, அழைப்பதுபோல், மலர்ந்த தாமரை அன்ன திருக் கரத்தில், நுனியை, அசைக்க வளையும் (குகன் வேலே).

துணையின்றி தன்னந் தனியாய், வழியில் நடக்கின்ற, எனது இடப் பக்கமும், ஒப்பற்ற வலது புறத்தும், முன்னும் பின்னுமான இரண்டு பக்கங்களிலும், அண்டையில் நெருங்கி, இராக் காலத்திலும் பகல் காலத்திலும் துணையாக இருந்து என்னைக் காப்பாற்றும் (குகன் வேலே).

கோபப்பட்டு வருகின்ற அசுரர்களின் உடம்பில், பல தகாத உணவு வகைகளை உண்டு கொழுப்படைந்து வளர்ந்துள்ள, பெருத்திருக்கின்ற குடல்களை, சிவத்த பூ மாலை போல, தன் உச்சியில் பிரியத்துடன் தரித்துக் கொள்ளும் (குகன் வேலே).

அலைகள் வீசும் கடலை, பிளந்து, சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உறிஞ்சிப் பருகி, உடைப்பு எடுத்து ஓடும் (நீரை), உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து, வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் (குகன் வேலே).

எட்டு திக்குகளிலும் உள்ள மலைகளை, தேவர்களில் முதன்மை வாய்ந்த இந்திரன், அறுத்துத் தள்ளின இறக்கைகள் மறுபடியும் முளைத்தது என்று பார்ப்போர்கள் கூறுமாறு, அண்ட உச்சியின் நடுவில் பறந்துகொண்டு, அளவில்லா வேகம் கொண்டு, அகில உலகங்கள் நடுங்கும்படி விரைந்து ஓடும் (குகன் வேலே).

கோபத்தை உடைய அசுரர்கள், போர் செய்த யுத்த களத்தில், உடலில் இருந்து அறுக்கப்பட்ட அளவற்ற தலைகள், நாம் எப்படி எல்லாம் இருந்தோம், இப்போது இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று வருந்தி தமக்குத் தாமே சிரித்துக்கொண்டு, பற்களை நற நற என்று கடித்துக் கொண்டு, கண்களை உருட்டிப் பார்த்து, வாய் விட்டு அலறும்படி அசுரர்களைத் தாக்கும் (குகன் வேலே).

திருத்தணியம்பதியில் திருக்காட்சி வழங்கி அருளுகின்ற, ஞான சூரியனாய் காட்சி நல்கும் ஒப்பற்றவனும், மலைக் கிழவனும், என்னுடைய மனதில் எழுந்தருளி இருக்கும் கடவுளும் ஆகிய, மயிலை வாகனமாகக்கொண்ட முருகப் பெருமானது வேலாயுதமே (மேற்சொன்ன சிறப்புகளைக் கொண்டதாகும்).

சொல் விளக்கம்

  1. பருத்த முலை ... பெருத்திருக்கும் தன பாரங்களையும், சிறுத்த இடை ... நுண்ணியதாக ஒடுங்கி இருக்கும் இடையையும், வெளுத்த நகை ...
    வெண்மை நிறம் வீசும் பற்களையும், கறுத்த குழல் ... கருமை நிறம் கொண்ட கூந்தலையும், சிவத்த இதழ் ... சிவந்த உதடுகளையும் உடைய, மறச் சிறுமி ... வீரம் மிக்க வேடர் குலத் திலகமாகிய வள்ளிப் பிராட்டியின், விழிக்கு நிகராகும் ... திருக் கண்களுக்கு ஒப்பாகும் (குகன் வேலே).

  2. பனைக்கை ... பனை மரம் போன்று நீண்டு தொங்கும் துதிக்கையும், முக படம் ... முகத்தில் அணிந்த சித்திர வேலைப்பாடு அணிந்த சீலையும், கரட மதம் ... இரண்டு கபால மத நீரையும், தவள ... வெண்ணிறத்தையும் உடைய, கசம் ... (கஜம்) ஐராவதம் என்னும் யானையை, கடவுள் ... வாகனமாகக் கொண்ட இந்திரன், பதத்து இடு ... கால்களில் சூரபத்மனால் இடப்பட்ட, நிகளத்து ... சிறை விலங்கின், முளை ... ஆணியானது, தெறிக்க அரம் ஆகும் ... உடை பட்டு விழ அரம் போல் செயல்படும் (குகன் வேலே).

  3. பழுத்த ... ஞானம் கனிந்த, முது ... பழமை வாய்ந்த, தமிழ்ப் பலகை ... மதுரை தமிழ்ச் சங்க பலகையில், இருக்கும் ... தலைவனாக அமர்ந்திருக்கும், ஒரு கவிப் புலவன் ... ஒப்பற்ற பாக்கள் இயற்றும் அறிவில் சிறந்த நக்கீரனுடைய , இசைக்குருகி ... பாட்டின் இனிய பொருள் மிக்க ஒலிக்கு திருவுள்ளம் உருகி, வரைக் குகையை ... திருப்பரங்கிரி மலைக் ரூ க்ஷ் குகையை, இடித்து வழி காணும் ... அங்கு கற்கிமுகி எனும் பூதத்தால் அடைக்கப் பட்டிருந்த நக்கீரர் முதலிய புலவர்கள் அனைவரையும் அக்குகையிலிருந்து வெளி வர வழி செய்து கொடுத்தது (குகன் வேலே).

  4. பசித்து ... பசி கொண்டு, அலகை ... பேய்கள், முசித்து ... மெலிந்து, அழுது ... அழுது புலம்பி, முறைப் படுதல் ஒழித்து ... ரூ எங்கள் பசி தாங்க முடியவில்லையே க்ஷ் என முறையிடுதலை அறவே நீக்கி, அவுணர் ... அசுரர்களின், உரத்து உதிரம் ... உடலின் இரத்தம் தோய்ந்த, நிணத்தசைகள் ... கொழுப்போடு சேர்ந்த மாமிசத்தை, புசிக்க ... அப்பேய்கள் உண்ண, அருள் நேரும் ... மறக்கருணையால் உடன்படும் (குகன் வேலே).

  5. சுரர்க்கும் ... வானோர்களுக்கும், முனிவரர்க்கும் ... தவ சிரேஷ்டர்களுக்கும், மகபதிக்கும் ... இந்திரனுக்கும், விதிதனக்கும் ... பிரம்மனுக்கும், அரி தனக்கும் ... திருமாலுக்கும், நரர் தமக்கும் ... உலக மக்களுக்கும், உறும் ... நேர்ந்த, இடுக்கண் ... துன்பத்திற்கு காரணமான, வினை ... தீவினைக் கூட்டங்களை, சாடும் ... மோதி அழிக்கும். (குகன் வேலே).

  6. சுடர்ப் பரிதி ஒளிப்ப ... ஒளியை உடைய செங்கதிரோன் தோற்றுப்போய் ஒளித்துக்கொள்ளவும், நிலவு ஒழுக்குமதி ஒளிப்ப ... குளிர்ந்த கிரணங்களை உடைய வெண்கதிரோனும் ஒளித்துக்கொள்ளவும், அலை அடக்கு தழல் ஒளிப்ப ... கரை கடந்து உலகை அழிக்காதபடி சமுத்திரத்தை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுக அக்னி ஒளித்துக்கொள்ளவும், ஒளிர் ... பிரகாசிக்கின்ற, ஒளிப் பிரபை வீசும் ... ஒளியை உடைய ஞானாசக்தியை எங்கும் பரவும்படி செய்யும் (குகன் வேலே)

  7. துதிக்கும் ... தன்னைப் போற்றி வணங்கும், அடியவர்க்கு ... அன்பர்களுக்கு, ஒருவர் ... வேறு யாரேனும் ஒருவர், கெடுக்க ... அந்த அடியவரை அழிக்க, இடர் நினைக்கின் ... ஏதேனும் துன்பம் செய்ய மனதில் எண்ணினாலும், அவர் குலத்தை ... அவர் வம்சத்தையே, முதல் அற களையும் ... வேருடன் அழித்து களைந்து விடும், எனக்கு ஓர் துணையாகும் ... எனக்கு ஒப்பற்ற துணையாக இருந்து உதவி புரியும் (குகன் வேலே).

  8. சொலற்கரிய ... அருமை பெருமைகளை அளவிட்டுச் சொல்ல இயலாத, திருப்புகழை ... இறைவனது அருள் சம்பந்தப்பட்ட திருப்புகழை, உரைத்தவரை ... விருப்புடன் செப்பியவரை, அடுத்த பகை ... நெருங்கிவரும் பகை நிலைமையை, அறுத்தெறிய ... வேருடன் அறுத்து எறிவதற்கு, உறுக்கி எழும் ... உக்ரத்துடன் புறப்படும், அறத்தை நிலை காணும் ... தர்மத்தை நிலை பெறச் செய்யும் (குகன் வேலே).

  9. தருக்கி ... இறுமாப்புடன், நமன் ... எமன், முருக்கவரின் ... அழிக்க வந்தால், எருக்கு ... எருக்க மலரையும், மதி ... திங்களையும், தரித்த முடி படைத்த ... சூடிய ஜடா பாரத்தை உடைய, விறல் படைத்த ... வெற்றி அமைந்து, இறை கழற்கு ... எங்கும் இருப்பவரான சிவபிரானின் திருவடிக்கு, நிகராகும் ... ஒப்பாகும் (குகன் வேலே).

  10. தலத்தில் உள ... தமது ஆட்சியில் உள்ள, கணத்தொகுதி ... சிவக் கண கூட்டம், களிப்பின் உண ... மகிழ்வோடு உண்பதற்கு, அழைப்பதென ... அழைப்பதுபோல், மலர்க் கமல கரத்தின் ... மலர்ந்த தாமரை அன்ன திருக் கரத்தில், முனை ... நுனியை, விதிர்க்க வளைவு ஆகும் ... அசைக்க வளையும் (குகன் வேலே).

  11. தனித்து ... துணையின்றி தன்னந் தனியாய், வழி நடக்கும் ... வழியில் நடக்கின்ற, எனது இடத்தும் ... எனது இடப் பக்கமும், ஒரு வலத்தும் ... ஒப்பற்ற வலது புறத்தும், இரு புறத்தும் ... முன்னும் பின்னுமான இரண்டு பக்கங்களிலும், அருகு அடுத்து ... அண்டையில் நெருங்கி, இரவு பகல் துணையதாகும் ... இராக் காலத்திலும் பகல் காலத்திலும் துணையாக இருந்து என்னைக் காப்பாற்றும் (குகன் வேலே).

  12. சலத்து வரும் அரக்கர் உடல் ... கோபப்பட்டு வருகின்ற அசுரர்களின் உடம்பில், கொழுத்து வளர் ... பல தகாத உணவு வகைகளை உண்டு கொழுப்படைந்து வளர்ந்துள்ள, பெருத்த குடர் ... பெருத்திருக்கின்ற குடல்களை, சிவத்த தொடை என ... சிவத்த பூ மாலை போல, சிகையில் விருப்பமொடு சூடும் ... தன் உச்சியில் பிரியத்துடன் தரித்துக் கொள்ளும் (குகன் வேலே).

  13. திரைக்கடலை ... அலைகள் வீசும் கடலை, உடைத்து ... பிளந்து, நிறை புனல் கடிது குடித்து ... சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உறிஞ்சிப் பருகி, உடையும் ... உடைப்பு எடுத்து ஓடும் (நீரை), உடைப்பு அடைய அடைத்து ... உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து, உதிரம் நிறைத்து விளையாடும் ... வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் (குகன் வேலே).

  14. திசைக் கிரியை ... எட்டு திக்குகளிலும் உள்ள மலைகளை, முதற் குலிசன் ... தேவர்களில் முதன்மை வாய்ந்த இந்திரன், அறுத்த சிறை முளைத்ததென ... அறுத்துத் தள்ளின இறக்கைகள் மறுபடியும் முளைத்தது என்று பார்ப்போர்கள் கூறுமாறு, முகட்டின் இடை பறக்க ... அண்ட உச்சியின் நடுவில் பறந்துகொண்டு, அற விசைத்து ... அளவில்லா வேகம் கொண்டு, அதிர ஓடும் ... அகில உலகங்கள் நடுங்கும்படி விரைந்து ஓடும் (குகன் வேலே).

  15. சினத்து அவுணர் ... கோபத்தை உடைய அசுரர்கள், எதிர்த்த ரண களத்தில் ... போர் செய்த யுத்த களத்தில், வெகு குறைத்தலைகள் ... உடலில் இருந்து அறுக்கப்பட்ட அளவற்ற தலைகள், சிரித்து ... நாம் எப்படி எல்லாம் இருந்தோம், இப்போது இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று வருந்தி தமக்குத் தாமே சிரித்துக்கொண்டு, எயிறு கடித்து ... பற்களை நற நற என்று கடித்துக் கொண்டு, விழி விழித்து ... கண்களை உருட்டிப் பார்த்து, அலற மோதும் ... வாய் விட்டு அலறும்படி அசுரர்களைத் தாக்கும் (குகன் வேலே).

  16. திருத்தணியில் ... திருத்தணியம்பதியில் திருக்காட்சி வழங்கி அருளுகின்ற, உதித்து அருளும் ஒருத்தன் ... ஞான சூரியனாய் காட்சி நல்கும் ஒப்பற்றவனும், மலை விருத்தன் ... மலைக் கிழவனும், எனது உளத்தில் உறை கருத்தன் ... என்னுடைய மனதில் எழுந்தருளி இருக்கும் கடவுளும் ஆகிய, மயில் நடத்து குகன் வேலே ... மயிலை வாகனமாகக்கொண்ட முருகப் பெருமானது வேலாயுதமே (மேற்சொன்ன சிறப்புகளைக் கொண்டதாகும்).

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

15%
Reading Progress
Local First