Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

thevendira sanga vakuppu

~ 9 min read

தேவேந்திர சங்க வகுப்பு

முன்னுரை

முருகன் திருநாமத்தை மொழிபவர் இவரென ஆராய்ந்தறிந்து அவர் தமைத் தேவேந்திர சங்கமும் வணங்கும் என்பது இதன் கருத்து.

தேவேந்திர சங்க வகுப்பு (மூலம்)

தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாச்சனி நச்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கச்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரÿணடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே

தேவேந்திர சங்க வகுப்பு (பதம் பிரித்தது)

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதி கொடு
சாடோங்கு நெடும் கிரி ஓடு ஏந்து பயங்கரி

தமருக பரிபுர ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை
தாது அம் புய மந்திர வேதாந்த பரம்பரை

சரிவளை விரி சடை எரி புரை வடிவினள் சத தள முகுளித
தாமாங்குசம் மென் திரு தாளாந்திர அம்பிகை

தரு பதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணி முடி பொடி
தானாம் படி செங் கையில் வாள் வாங்கிய சங்கரி

இரண கிரண மட மயில் ம்ருக மத புளகித இள முலை இள
நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்

இறுகிய சிறு பிறை எயிறுடை யம படர் எனதுயிர் கொளவரின்
யான் ஏங்குதல் கண்டு எதிர் தானேன்று கொளும் குயில்6

இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெட விடு மன கர தல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி இணை தொழும் மவுனிகள்
ஏகாந்த சுகம் தரு பாச அங்குச சுந்தரி8

கரணமும் மரணமும் மலமொடும் உடல் படு கடு வினை கெட நினை
காலாந்தரி கந்தரி நீல அச்சனி நச்சுமிழ்

கனலெரி கண பண குணமணி அணி பணி கனவளை மரகத
காசு அம்பர கச்சுளி தூசாம்படி கொண்டவள்

கனை கழல் நினையலர் உயிர் அவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழுங்கழுநீர் தோய்ந்த பெருந்திரு

கரை பொழி திரு முக கருணையில் உலகு ஏழு கடல் நிலை பெற வளர்
காவு ஏந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்

அரண் நெடு வட வரை அடியொடு பொடி பட அலைகடல் கெடடுஅயில்டு
வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்

அறுமுகன் ஒருபதொடு இருபுயன் அபினவன் அழகிய குறமகள்
தார் வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்

அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா
மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்

அதிபதி என வரு பொரு திறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே

பதவுரை

பூவுலகத்தில், கோட்டைகளை அமைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக வாழ்ந்து வந்த, பகைவனாகிய, இரண்யாசுரனின் உடலை, நகங்களின் கூரிய நுனியைக் கொண்டு, எதிர்த்து அழித்து, பெரிய மலை போல் உயர்ந்த நரசிங்க அவதாரத்தை எடுத்தவள்,

ப்ரம்ம கபாலத்தை கையில் ஏந்தி உள்ளவள், அடியார்களின் அச்சத்தை நீக்குபவள், பகைவர்களுக்கு அச்சத்தை தருபவள், உடுக்கை சிலம்பு இவைகள் ஒலிக்க, சங்கார நர்த்தனம் புரியும், திருவடிகளை உடையவள், நான்கு வேதங்களினாலும் துதிக்கப் படுபவள்,

மகரந்தப் பொடி நிறைந்துள்ள தாமரை மலரைப் போன்ற திரு அடிகளை உடையவள், பஞ்சாட்சர ஷடாச்சர முதலிய ஸ்ரீ வித்யா ரூபமாக திகழ்பவள், வேதங்களின் முடிவாக விளங்குபவள், மேலான யாவருக்கும் மேலானவள்,

முன் கையில் வளையல் கூட்டங்களை கொண்டவள், சடை விரிந்த தவக் கோலம் கொண்டவள், மூண்டு எரியும் நெருப்பு போன்ற வடிவம் கொண்டவள், நூறு இதழ்களைக் கொண்ட தாமரை அரும்பு விட்டது போல் காட்சி கொடுக்கும், மாலைகளை பூண்டிருக்கும் அழகிய மார்பை உடையவள்,

மென்மையான தாள்களை உடைய தேவி, கற்பகத் தருவைக் கொண்ட நகரமாகிய அமராவதியில் வாழும் தேவர்களுடன், மாறுபட்டு போரிட்ட, அரக்கர்களின், அகன்ற ரத்னங்கள் பதித்த கிரீடங்கள் பொடியாகும்படி, அழகிய கையில் வாளை ஏந்தி இருக்கும் சங்கரி,

பொன் நிறத்தவளாகி, ஒளி வீசுபவளாகிய, மடப்பமுடைய மயிலன்ன சாயலை உடையவள், கஸ்தூரி பூசியதும், புளகாங்கிதம் கொண்டதுமான, இள நீரின் குரும்பை போன்ற யெளவன மார்பை தாங்குவதால், ஒடிந்து விடுவது போல் காட்சி தரும், சிறிய நூல் போன்ற நுண் இடையினை உடையவள்,

இறுக்கி இருக்கும் பிறைச் சந்திரனைப் போன்ற, பற்களை உடைய, எம தூதர்கள், எனது உயிரை பறித்துப் போக வந்தால், நான் அப்போது அடையும் பெரும் துயரைக் கண்டு, என் எதிரில் தோன்றி, எனக்கு அபயம் அளித்து ஆட்கொண்டு அருளும் குயில் போன்றவள்,

பிச்சை வாங்குவதற்காக, உலகத்தில் உழலும், நலிந்தவர்கள், துன்பங்கள் அகலும்படி, அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுக்கும் மனமும், கைத்தலமும் கொண்டு, காஞ்சியில் ஏகாம்பர நாதரின் மனைவியான காமாட்சி, மோட்ச லட்சுமி, கவர்ச்சிகரமான உறுப்புகளை உடைய, என்றும் மங்கள ருபிணி, (தன் படைப்புகளான உயிர்கள் எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அவைகளுக்கு அந்தந்த வேளையில் உணவு போய் சேர அம்பிகையின் திருவுள்ளம் எண்ணுகிறது. சாவா மூவா சிவபெருமானின் பத்தினி அம்பிகை ஆதலின் அவள் சுமங்கலை).

திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் கருவி கரணங்கள் அடங்கி, இருளை அகற்றி ஞான ஒளி வீசும் தன் திருவடிகள், இரண்டையும் தியானிக்கும் மவுன ஞானிகளுக்கு, முடிவான பேரின்ப நிலையை அருளுகின்ற, பாசத்தையும் அங்குசத்தையும் கையில் ஏந்தியுள்ள திவ்ய அழகி, (கருவி கரணங்கள் ஒடுங்கி அத்துவித நிலையில் தன்னை தியானிக்கின்ற அடியார்களுக்கு பேரின்ப அநுபூதி நிலையைத் தருபவள்.
தன்னுடைய கைகளில் உள்ள பாசத்தால் அடியார்களின் ஆணவம் என்னும் களிற்றை பிடித்து அடக்கி அங்குசத்தால் அதனை அடியோடு மாய்த்து விடுகிறாள் அம்பிகை).

ஐந்து இந்திரியங்களின் சேஷ்டைகள், இறப்பு, மும் மலங்கள், சரீரம் அநுபவிக்கும் கொடிய சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்ற வினைகள், (இவை எல்லாம்) அடியார்களை அணுகாவண்ணம், திருவுள்ளம் கொள்ளும், மூன்று காலங்களையும் கடந்து அதற்கும் மேற்ப்பட்ட நிலையில் நிற்பவள்,

அடியார்களின் இதய குகையில் வீற்றிருப்பவள், கறுப்பு நிறமுள்ள மையைப் பூசிக்கொள்பவள், விஷத்தை உமிழ்வதும், நெருப்பு ஜ்வாலையை கக்குவதுமானதும், கூட்டத்துடன் விளங்கும் பணா மகுடங்களை கொண்டதும், சிறந்த ஜாதி ரத்னங்களை, முடியில் தாங்கும், சர்ப்பத்தை, பெருமை மிக்க கையில் வளையள் ஆகத் தரித்திருப்பவள்,

பச்சை நிறத்தவள், காயாம்பூ நிறமுள்ள, உடையும், சட்டையும், வஸ்திரமாக ஏற்றுக் கொண்டவள்,

ஒலி செய்யும் தனது இணையடிகளை, அன்புடன் தியானிக்காத பாவிகளின், உயிரைப் போக்குகின்ற, பயிரவி தேவி, பொன் நிறமானவள்,

கமலாம்பிகை, காதில் குழையாக, நீலோற்பல மலரை தரித்திருக்கும், மோட்ச லட்சுமி, (பார்வதி), உள்ளம் கனிந்து வீசுகின்ற, கருணா கடாட்சத்தால், ஏழு உலகங்களும், ஏழு சமுத்திரங்களும் (ஏழு இடை நிலை தீபம்), நிலைத்திருக்கும்படி, பரிபாலனம் செய்யும், காத்தல் தொழிலை மேற்கொண்டுள்ள, பசுமையான கிளி போன்றவள்,

மகா சாம்பவியான பார்வதி தேவி, தந்து அருளியவன்,

இந்த உலகத்திற்கு கோட்டை போல் விளங்கும், நெடிய மேரு மலை, முற்றிலும் தூளாகும்படியும், அலை வீசும் சமுத்திரம் வற்றிப் போகும்படியும், கூரிய வேலாயுதத்தை செலுத்திய, தீந் தமிழ் நூல்களுக்கெல்லாம் உரிமையானவன்,

குமரன், குகன், வேலாயுதக் கடவுள், பன்னிரு புயங்களை உடையவன், என்றும் புதியவன், அழகு மிக்க வள்ளியின், மண மாலை சூடிய, தோள்களை உடையவன், பகைவர்களுக்கு எமன் போன்றவன்,

வலிமை உள்ளவரும், மதம் வாய்ந்த கன்னங்களை உடையவரும், விநோத அழகு உடையவருமாகிய, மஹா கணபதியை, எப்போதும், தியானித்து இருக்கும் மனிதர்களின், உள்ளத்தில் தானும் வந்து குடி புகுந்து, திருச்செந்தூருக்கு நாயகனாக விளங்கும் போரில் வல்ல முருகப் பெருமானை, அருள் கிட்டும்படி துதித்து வணங்குபவர்களை, ஆராய்ந்து கண்டுபிடித்து வணங்குவார்கள், தேவேந்திரனும் அவனுடைய பரிவாரங்களும்.

சொல் விளக்கம்

1. தரணியில் ... பூவுலகத்தில், அரணிய ... கோட்டைகளை அமைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக வாழ்ந்து வந்த, முரண் ... பகைவனாகிய, இரணியன் உடல்தனை ... இரண்யாசுரனின் உடலை, நக நுதி கொடு ... நகங்களின் கூரிய நுனியைக் கொண்டு, சாடு ... எதிர்த்து அழித்து, ஓங்கு நெடும் கிரி ... பெரிய மலை போல் உயர்ந்த நரசிங்க அவதாரத்தை எடுத்தவள், ஓடு ஏந்து ... ப்ரம்ம கபாலத்தை கையில் ஏந்தி உள்ளவள், பயங்கரி ... அடியார்களின் அச்சத்தை நீக்குபவள், பகைவர்களுக்கு அச்சத்தை தருபவள்,

2. தமருக பரிபுர ஒலி கொடு ... உடுக்கை சிலம்பு இவைகள் ஒலிக்க, நட நவில் ... சங்கார நர்த்தனம் புரியும், சரணிய ... திருவடிகளை உடையவள், சதுர் மறை ... நான்கு வேதங்களினாலும் துதிக்கப் படுபவள், தாது அம் புய ... மகரந்தப் பொடி நிறைந்துள்ள தாமரை மலரைப் போன்ற திரு அடிகளை உடையவள், மந்திர ... பஞ்சாட்சர ஷடாச்சர முதலிய ஸ்ரீ வித்யா ரூபமாக திகழ்பவள், வேதாந்த ... வேதங்களின் முடிவாக விளங்குபவள், பரம்பரை ... மேலான யாவருக்கும் மேலானவள்,

3. சரிவளை ... முன் கையில் வளையல் கூட்டங்களை கொண்டவள், விரி சடை ... சடை விரிந்த தவக் கோலம் கொண்டவள், எரி புரை வடிவினள் ... மூண்டு எரியும் நெருப்பு போன்ற வடிவம் கொண்டவள், சத தள முகுளித ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரை அரும்பு விட்டது போல் காட்சி கொடுக்கும், தாமாங்குசம் ... மாலைகளை பூண்டிருக்கும் அழகிய மார்பை உடையவள், மென் திரு தாளாந்திர அம்பிகை ... மென்மையான தாள்களை உடைய தேவி,

4. தரு பதி சுரரொடு ... கற்பகத் தருவைக் கொண்ட நகரமாகிய அமராவதியில் வாழும் தேவர்களுடன், சருவிய ... மாறுபட்டு போரிட்ட, அசுரர்கள் ... அரக்கர்களின், தட மணி முடி பொடி தானாம் படி ... அகன்ற ரத்னங்கள் பதித்த கிரீடங்கள் பொடியாகும்படி, செங் கையில் வாள் வாங்கிய சங்கரி ... அழகிய கையில் வாளை ஏந்தி இருக்கும் சங்கரி,

5. இரண ... பொன் நிறத்தவளாகி, கிரண ... ஒளி வீசுபவளாகிய, மட மயில் ... மடப்பமுடைய மயிலன்ன சாயலை உடையவள், ம்ருக மத ... கஸ்தூரி பூசியதும், புளகித ... புளகாங்கிதம் கொண்டதுமான, இள முலை இள நீர் தாங்கி ... இள நீரின் குரும்பை போன்ற யெளவன மார்பை தாங்குவதால், நுடங்கிய ... ஒடிந்து விடுவது போல் காட்சி தரும், நூல் போன்ற மருங்கினள் ... சிறிய நூல் போன்ற நுண் இடையினை உடையவள்,

6. இறுகிய சிறு பிறை ... இறுக்கி இருக்கும் பிறைச் சந்திரனைப் போன்ற, எயிறுடை ... பற்களை உடைய, எம படர் ... எம தூதர்கள், எனதுயிர் கொளவரின் ... எனது உயிரை பறித்துப் போக வந்தால், யான் ஏங்குதல் கண்டு ... நான் அப்போது அடையும் பெரும் துயரைக் கண்டு, எதிர் ... என் எதிரில் தோன்றி, தானேன்று கொளும் குயில் ... எனக்கு அபயம் அளித்து ஆட்கொண்டு அருளும் குயில் போன்றவள்,

7. இடுபலி ... பிச்சை வாங்குவதற்காக, கொடு திரி ... உலகத்தில் உழலும், இரவலர் ... நலிந்தவர்கள், இடர் கெட ... துன்பங்கள் அகலும்படி, இடு மன ... அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுக்கும் மனமும், கர தல ... கைத்தலமும் கொண்டு, ஏகாம்பரை ... காஞ்சியில் ஏகாம்பர நாதரின் மனைவியான காமாட்சி, இந்திரை ... மோட்ச லட்சுமி, மோகாங்க சுமங்கலை ... கவர்ச்சிகரமான உறுப்புகளை உடைய, என்றும் மங்கள ருபிணி, (தன் படைப்புகளான உயிர்கள் எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அவைகளுக்கு அந்தந்த வேளையில் உணவு போய் சேர அம்பிகையின் திருவுள்ளம் எண்ணுகிறது. ரூ கல்லினுள் தேரை க்ஷ் எனும் பாடலே இதற்குச் சான்று. காஞ்சியில் இரு நாழி நெல்லைக் கொண்டு 32 அறங்களை வளர்த்த குறிப்பு இங்கு வருகிறது. சாவா மூவா சிவபெருமானின் பத்தினி அம்பிகை ஆதலின் அவள் சுமங்கலை).

8. எழுதிய படமென ... திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் கருவி கரணங்கள் அடங்கி, இருளறு சுடரடி ... இருளை அகற்றி ஞான ஒளி வீசும் தன் திருவடிகள், இணை தொழும் மவுனிகள் ... இரண்டையும் தியானிக்கும் மவுன ஞானிகளுக்கு, ஏகாந்த சுகம் தரு ... முடிவான பேரின்ப நிலையை அருளுகின்ற, பாச அங்குச சுந்தரி ... பாசத்தையும் அங்குசத்தையும் கையில் ஏந்தியுள்ள திவ்ய அழகி, (கருவி கரணங்கள் ஒடுங்கி அத்துவித நிலையில் தன்னை தியானிக்கின்ற அடியார்களுக்கு பேரின்ப அநுபூதி நிலையைத் தருபவள். தன்னுடைய கைகளில் உள்ள பாசத்தால் அடியார்களின் ஆணவம் என்னும் களிற்றை பிடித்து அடக்கி அங்குசத்தால் அதனை அடியோடு மாய்த்து விடுகிறாள் அம்பிகை).

9. கரணமும் ... ஐந்து இந்திரியங்களின் சேஷ்டைகள், மரணமும் ... இறப்பு, மலமொடும் ... மும் மலங்கள், உடல் படு கடு வினை ... சரீரம் அநுபவிக்கும் கொடிய சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமியம் என்ற வினைகள், கெட ... (இவை எல்லாம்) அடியார்களை அணுகாவண்ணம், நினை ... திருவுள்ளம் கொள்ளும், காலாந்தரி ... மூன்று காலங்களையும் கடந்து அதற்கும் மேற்ப்பட்ட நிலையில் நிற்பவள், கந்தரி ... அடியார்களின் இதய குகையில் வீற்றிருப்பவள், நீல அச்சனி ... கறுப்பு நிறமுள்ள மையைப் பூசிக்கொள்பவள், நச்சுமிழ் ... விஷத்தை உமிழ்வதும்,

10. கனலெரி ... நெருப்பு ஜ்வாலையை கக்குவதுமானதும், கண பண ... கூட்டத்துடன் விளங்கும் பணா மகுடங்களை கொண்டதும், குணமணி ... சிறந்த ஜாதி ரத்னங்களை, அணி ... முடியில் தாங்கும், பணி ... சர்ப்பத்தை, கன வளை ... பெருமை மிக்க கையில் வளையள் ஆகத் தரித்திருப்பவள், மரகத ... பச்சை நிறத்தவள், காசு ... காயாம்பூ நிறமுள்ள, அம்பர ... உடையும், கச்சுளி ... சட்டையும், தூசாம்படி கொண்டவள் ... வஸ்திரமாக ஏற்றுக் கொண்டவள்,

11. கனை கழல் ... ஒலி செய்யும் தனது இணையடிகளை, நினையலர் ... அன்புடன் தியானிக்காத பாவிகளின், உயிர் அவி ... உயிரைப் போக்குகின்ற, பயிரவி ... பயிரவி தேவி, கவுரி ... பொன் நிறமானவள், கமலை ... கமலாம்பிகை, குழை காதார்ந்த ... காதில் குழையாக, செழுங்கழுநீர் தோய்ந்த ... நீலோற்பல மலரை தரித்திருக்கும், பெருந்திரு ... மோட்ச லட்சுமி, (பார்வதி),

12. கரை பொழி ... உள்ளம் கனிந்து வீசுகின்ற, திரு முக கருணையில் ... கருணா கடாட்சத்தால், உலகு ஏழு கடல் ... ஏழு உலகங்களும், ஏழு சமுத்திரங்களும் (ஏழு இடை நிலை தீபம்), நிலை பெற ... நிலைத்திருக்கும்படி, வளர் ... பரிபாலனம் செய்யும், காவு ஏந்திய ... காத்தல் தொழிலை மேற்கொண்டுள்ள, பைங்கிளி ... பசுமையான கிளி போன்றவள், மா சாம்பவி ... மகா சாம்பவியான பார்வதி தேவி, தந்தவன் ... தந்து அருளியவன்,

13. அரண் ... இந்த உலகத்திற்கு கோட்டை போல் விளங்கும், நெடு வட வரை ... நெடிய மேரு மலை, அடியொடு பொடி பட ... முற்றிலும் தூளாகும்படியும், அலைகடல் கெட ... அலை வீசும் சமுத்திரம் வற்றிப் போகும்படியும், அயில் வேல் வாங்கிய ... கூரிய வேலாயுதத்தை செலுத்திய, செந்தமிழ் நூலோன் ... தீந் தமிழ் நூல்களுக்கெல்லாம் உரிமையானவன், குமரன், குகன்... குமரன், குகன், வேலாயுதக் கடவுள்,

14. அறுமுகன் ஒருபதொடு இருபுயன் ... பன்னிரு புயங்களை உடையவன், அபிநவன் ... என்றும் புதியவன், அழகிய குற மகள் ... அழகு மிக்க வள்ளியின், தார் வேய்ந்த ... மண மாலை சூடிய, புயன் ... தோள்களை உடையவன், பகையா மாந்தர்கள் அந்தகன் ... பகைவர்களுக்கு எமன் போன்றவன்,

15. அடல் மிகு ... வலிமை உள்ளவரும், கட தட ... மதம் வாய்ந்த கன்னங்களை உடையவரும், விகடித ... விநோத அழகு உடையவருமாகிய, மத களிறு ... மஹா கணபதியை, அனவரதமும் ... எப்போதும், அகலா மாந்தர்கள் ... தியானித்து இருக்கும் மனிதர்களின், சிந்தையில் வாழ்வாம் படி ... உள்ளத்தில் தானும் வந்து குடி புகுந்து, செந்திலில் .... திருச்செந்தூருக்கு

16. அதிபதி என வரும் ... (திருச்செந்தூருக்கு)நாயகனாக விளங்கும் பொரு திறல் முருகனை ... போரில் வல்ல முருகப் பெருமானை, அருள் பட மொழிபவர் ... அருள் கிட்டும்படி துதித்து வணங்குபவர்களை, ஆராய்ந்து வணங்குவர் ... ஆராய்ந்து கண்டுபிடித்து வணங்குவார்கள், தேவேந்திர சங்கமே ... தேவேந்திரனும் அவனுடைய பரிவாரங்களும்.

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

11%
Reading Progress
Local First